பெரும் சர்ச்சைகளுடன் வெளியாகியுள்ள எம்புரான் படத்தை தயாரித்த நான்கு நிறுவனங்களில் கோகுலம் நிதி நிறுவனமும் ஒன்றாகும். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது. அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சட்டவிரோத பணபரிமாற்றமும் அடங்கும்.

வருமானவரித்துறை தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் நேற்று கொச்சியில் உள்ள கோகுலம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அலுவலங்களில் சோதனை மேற்கொண்டனர். நீலாங்கரையில் உள்ள கோகுலம் நிறுவனத்தின் உரிமையாளர் கோபாலகிருஷ்ணனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. விடிய, விடிய நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: எம்புரான் பட தயாரிப்பாளர் வீட்டில் திடீர் ரெய்டு... பரபரப்பு பின்னணி..!

இது முதல்கட்ட தகவல்தான் என்றும், முழுமையான தகவல்கள் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை சரிபார்த்த பின்னரே வெளியாகும் என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்புரான் படத்தில் குஜராத் கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் இடம்பெற்றதே சர்ச்சைகளின் ஆரம்ப புள்ளி. நாடு முழுவதும் உள்ள இந்துத்துவ அமைப்புகள் எம்புரான் படத்திற்கு எதிராக கொந்தளித்தன. எதிர்ப்பு பணிந்து படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய 17 காட்சிகள் நீக்கப்பட்டன. படத்தின் நாயகனான மோகன்லாலும், நடந்த தவறுக்கு வருந்துவதாக மன்னிப்புக் கோரியிருந்தார்.

ஆனாலும் எம்புரான் சர்ச்சை, படத்தின் கதாநாயகன், இயக்குநர் ஆகியோரைத் தாண்டி தயாரிப்பாளர்கள் வரை நீடிக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளை வருமானவரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் தூசுதட்டி எடுத்து எம்புரானுக்கு எதிராக பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ED சோதனைக்கு எதிரான வழக்கு.. நீதிபதியை மாற்றக்கோரி முறையீடு..!