இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழகம் அஞ்சாது என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்குக் குட்டு வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத் துறை தற்போது மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

தமிழகத்தின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் திராணி இல்லாத பாஜக, தனது அச்சுறுத்தல் ஆயுதத்தை அமலாக்கத் துறை மூலம் நீட்டியது., பாஜகவின் ஆணவத்துக்கான அடிதான் உயர் நீதிமன்றம் இப்போது எழுப்பிய கேள்விகள். “இரவில் சோதனை நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை, யாரையும் துன்புறுத்தவில்லை” என்றெல்லாம் உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சொன்னபோது, “பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது” என நீதிமன்றம் கண்டித்திருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இரவு வரை பெண் அதிகாரியை சிறைபிடித்து சோதனை நடவடிக்கை எடுப்பது அச்சுறுத்தல் என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது உயர் நீதிமன்றம்.
இதையும் படிங்க: பொத்தாம் பொதுவாக உள்ளது, மனுவை திருத்த உத்தரவு.. வலுவற்ற வாதங்கள் வைக்கிறதா அரசு..?

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளைத் தனது கைப்பாவையாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்றும் பாஜக ஆளாத மாநிலங்களில் முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளைப் புனைந்து, எதிர்க்கட்சிகளை முடக்குவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் செயல்படுகிறது அமலாக்கத் துறை என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமலாக்கத் துறையால் வழக்குகள் பதியப்பட்டவர்கள், பாஜகவில் இணைந்ததும், அவர்கள் மீதான நடவடிக்கைகள் நின்றுவிடுவது அமலாக்கத் துறையின் அறிவிக்கப்படாத விதி என்றும் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதும் வழக்கு பதிவதும் முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆள்பிடிக்க மட்டுமே., எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து சோதனை நடத்துவது அதை வைத்து வழக்கு போடுவேன் எனச் சொல்லி மிரட்டி அவர்களை பாஜகவுக்கு ஆதரவாளராக மாற்றுவது என மத்திய பாஜக அரசின் அடியாள் துறையாக அமலாக்கத் துறை செயல்பட்டு வருகிறது.

முதுகெலும்பில்லாத கோழைகள் வேண்டுமானால் பாஜகவின் சித்து விளையாட்டுக்குப் பயந்து பாஜகவை ஆதரித்து அடிபணியலாம். ஒருகாலமும் திமுகவின் கடைக்கோடித் தொண்டனையோ, திராவிட மாடல் அரசையோ துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது என அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத் துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழகத்தையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் சோதனை மேற்கொண்டது.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் இப்போது எடுத்திருக்கும் முயற்சி நாடாளுமன்ற மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்திருக்கும் ஆதரவு பாஜகவை நிலைகுலையச் செய்திருக்கிறது என்று அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்துள்ளார் அமைச்சர் ரகுபதி. கொள்ளையனோடு கூட்டுச் சேர்ந்த காவலனாக அமலாக்கத் துறை பாஜகவோடு கூட்டு வைத்து, பாஜகவின் குற்றங்களுக்குத் துணை போய்க் கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ED-க்கு எதிரான வழக்கு.. தமிழக அரசு மனுவில் உள்ள 30 முக்கிய குற்றச்சாட்டுகள் இதுதான்..!