‘10 மசோதாக்கள் தீர்ப்பில் பெரிய வெற்றி எதுவும் இல்லை’ என்று சில தற்குறிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் ஊளையிட்டுக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது முரசொலி.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி 'தீர்ப்பின் சிறப்பு என்ன?' என்கிற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ''தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி தராமல் அதன் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் ஆளுநர் ரவி. இது ‘சட்டவிரோதமானது’ என்று உச்சநீதிமன்ற நீதியரசர்கள் தீர்ப்பு அளித்தார்கள். இதன்பிறகும், ‘இந்தத் தீர்ப்பில் பெரிய வெற்றி எதுவும் இல்லை’ என்று சில தற்குறிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் ஊளையிட்டுக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பின் சிறப்பு என்ன? தமிழ்நாடு அரசு தனது உரிமையாக எதைக் கேட்டதோ, அதை வழங்கி இருக்கிறது இந்தத் தீர்ப்பு. அதுதான் தீர்ப்பின் சிறப்பு ஆகும்.
இதையும் படிங்க: 10 மசோதாவில் இப்படியொரு சிக்கலா..? மேல்முறையீட்டுக்குப் போனால் திமுகவின் ஆட்டம் மொத்தமும் காலி..!
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்த போது, “தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியும் – உதாசீனப்படுத்த முடியும் என்றால் – இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் மாநிலங்களின் கதி என்ன? அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு எங்கே போகும்? பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம் பண்பாடு கொண்ட மக்களின் நிலைமை என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் கொள்கை முடிவை, வெறும் நியமனப் பதவியில் அமர்ந்திருக்கும் ஓர் ஆளுநர் மதிக்காமல் திருப்பி அனுப்புவது மக்களாட்சித் தத்துவத்துக்கே எதிரானது அல்லவா? பிறகு எந்த நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள்? யாரை நம்பி வாக்களிப்பார்கள்? என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி ஆகும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடு. அதனைச் சிதைக்கலாமா? இவற்றை எல்லாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதனை வலியுறுத்தும் வகையில் மிக முக்கியமான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார் முதலமைச்சர். 9.1.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர், “மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசையும், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களையும் வலியுறுத்துவது என்றும்;
மக்களாட்சித் தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டுமென்று, ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தைத் தான், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பாக அளித்துள்ளது. மசோதா மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். மசோதாவை நிறுத்தி வைப்பதாக இருந்தால் மூன்று மாதத்துக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அதனைச் செய்ய வேண்டும்.
மறுபரிசீலனை செய்வதற்காக மசோதாவை மாநில அரசுக்கு அனுப்பி, அதே மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு வந்தால் அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரையறுத்துவிட்டார்கள். இதுதான் முதலமைச்சரின் சட்டசபைத் தீர்மானத்தின் உள்ளடக்கம் ஆகும்.
“மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும்” என்று கேட்டார் முதலமைச்சர். அத்தகைய கால நிர்ணயத்தைச் செய்துள்ளது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

ஆளுநர் ரவி என்ன சொல்லித் திரிந்தார்? ‘நான் நிறுத்தி வைத்தாலே நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம்’ என்று கொக்கரித்தார். இவர் ஏதோ நாட்டின் அதிபர் போலச் சொன்னார். “இந்த ஆணவம் கூடாது, அப்படி எந்த அதிகாரமும் உங்களுக்கு இல்லை” என்று சொல்லி விட்டார்கள் நீதிபதிகள்.
அரசமைப்பின் 200ஆவது விதிப்படி சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். நிறுத்தி வைத்தால் காரணத்தை உடனடியாகச் சொல்ல வேண்டும். குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாலும் காரணம் சொல்ல வேண்டும். மீண்டும் அரசு அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் – என்று ஆளுநர்களுக்கு மிகச் சரியான கடிவாளத்தை உச்சநீதிமன்றம் போட்டுள்ளது.
இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கூடாது, அது சட்டவிரோதமானது என்று சொல்லி விட்டது உச்சநீதிமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் உரிமையை நிலைநாட்டி இருக்கிறது உச்சநீதிமன்றம். நியமனப் பதவியில் உட்கார்ந்து கொண்டு நிர்வாகத்தை முடக்கி, மக்களாட்சி மாண்பை நிர்மூலமாக ஆக்கத் துடிக்கும் ஆளுநர்களின் ஆணவச் செயல்களுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னதைப் போல, ‘இது இந்தியாவுக்கே வாங்கித் தரப்பட்ட தீர்ப்பு’ ஆகும். பிரிட்டிஷ் ஆட்சியின் கவர்னர் ஜெனரல்களைப் போல நினைத்துக் கொள்பவர்களின் பின் மண்டையில் தட்டி இருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்'' எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 10 மசோதாவில் இப்படியொரு சிக்கலா..? மேல்முறையீட்டுக்குப் போனால் திமுகவின் ஆட்டம் மொத்தமும் காலி..!