''துணை முதல்வர் பதவி என ஆசை வார்த்தை கூறி என்னை வீழ்த்த முடியாது. கூட்டணி தர்மத்துக்காக விஜய் திறந்து வைத்த கதவையும் மூடிவிட்டேன். நான் சராசரி அரசியல்வாதியல்ல'' எனக் கூறியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
புதுச்சேரி, திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''அதிமுக, பாமக மற்றும் தவெக போன்ற கட்சிகளுடனான கூட்டணி கதவை முற்றிலுமாக மூடி விட்டேன்.

தலித்துகளின் பிரச்சனை என்றால் ஒதுங்கி நிற்கின்றனர். தலித்துகளின் பிரச்சனைகளை பேச மறுத்து அரசியல் செய்கின்றனர். சாதி இந்துக்களின் வாக்கு பறிபோகும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. வேங்கைவயல் பிரச்சனையின் போது சுமார் 5 ஆயிரம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டத்தை நான் நடத்தினேன். கூட்டணியில் இருந்தாலும் கூட இதுவரை ஒரு பிரச்சனையில் இருந்தும் விசிக பின் வாங்கியது இல்லை. திமுக-வை எதிர்த்து விசிக போராடியதை போல் மற்ற எந்த கட்சியினரும் தமிழகத்தில் போராடியது இல்லை.
இதையும் படிங்க: நான்னா அவ்வளவு இலக்காரமா? விசிகவை வெளியேற்ற சதி.. ஆத்திரத்தில் கொந்தளித்த திருமா..!

தற்காலிக அரசியல் ஆதாயங்களுக்காக எந்த முடிவையும் நாங்கள் எடுத்தது இல்லை. திமுக-விடம் தொடர்ந்து பயணிப்பதற்காக நம்மை கேலி பேசுகின்றனர். தேவைப்பட்டால் பாஜக, பாமக, மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வேன் என்று கூறுபவர் சாதாரண அரசியல்வாதி. இவை சூது மற்றும் சூழ்ச்சியாக கருதப்படும். ஆனால், பாமக, பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுடன் நாம் சேர மாட்டோம். குறிப்பாக, அந்தக் கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் சேர மாட்டோம். இதனால் என்ன பாதிப்பு வந்தாலும் எனக்கு கவலை இல்லை.

பதவி தான் முக்கியம் என்று கூறுபவர்களால் இப்படி பேச முடியுமா? புதிதாக கட்சி தொடங்கிய நடிகரும், நண்பருமான விஜய்யுடன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால், அது தவறான யூகத்தை கொடுக்கும் என்று அந்நிகழ்வை தவிர்த்து விட்டேன். விஜய்யுடன் கூட்டணி சேருவதற்கான கதவையும் நான் மூடி விட்டேன். நீங்கள் நினைப்பது போல் சதாரண அரசியல்வாதிய் அல்ல இந்த திருமாவளவன். ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தை கூறி என்னை வீழ்த்தி விட முடியாது" என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் பலத்தை நிரூபிக்க பாகிஸ்தான் தான் தொக்கா..? திருமா ஆதங்கம்..!