திமுக மீது எதிர்கட்சிகள் வைக்கும் மிக முக்கியமான விமர்சனம் அது குடும்ப கட்சி என்பது தான். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரே தேர்தல் பிரசாரத்தின் போது இந்த விமர்சனத்தை கடுமையாக முன்வைப்பதை தமிழ்நாட்டு வாக்காளர்கள் நன்கறிவார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தபோது இதே கருத்தை தொடர்ந்து முன்வைத்து வாக்குகளை திரட்டுவார் என்பதும் நமக்கு தெரிந்ததே. அதேவரிசையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 25 ஆண்டுகளாக திமுக மீது இந்த விமர்சனத்தை கடுமையாக வைத்தவர்களில் முக்கியமானவர். தந்தை, மகன், பேரன் என திமுக தலைமை ஒரே குடும்பத்திற்குள் இருப்பதா? தகுதியானவர்களே திமுகவில் கிடையாதா? என்றெல்லாம் மேடைதோறும் முழங்கியவர் அவர்.

1980-களில் வன்னியர் சமூகத்தை ஒருங்கிணைத்து சங்கமாக்கி இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியாக அதனை உருவாக்கியவர் மருத்துவர் ராமதாஸ். அச்சமயத்தில், "நானோ, என் குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிட மாட்டோம். அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள்" என்பது மருத்துவர் ராமதாசின் புகழ்பெற்ற அறிவிப்புகளில் ஒன்று.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்.. கைதான சௌமியா.. கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..
ஆனால் தனது மகன் அன்புமணி ராமதாசை 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கட்சிக்குள் கொண்டு வந்தார். சில வருடங்களிலேயே பாமகவின் இளைஞரணித் தலைவராக வளர்த்தெடுக்கப்பட்டார். அப்போது இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தபோது, தகுதி மிக்க இளைஞர் மருத்துவமும், பொருளியலும் படித்தவர், கிராமத்தில் மருத்துவராக பணியாற்றி நாட்டு நடப்பை அறிந்தவர் என ராமதாஸ் அதற்கு விளக்கம் தந்தார்.
2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு காங்கிரஸ் கூட்டணியில் பங்கேற்று மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இதுகுறித்து அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மழுப்பலாக பதிலளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராமதாஸ்.
இதன்பிறகு அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணியை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதி வேட்பாளராக அறிவித்தார். ஆனால் அந்த தேர்தலில் சௌமியா அன்புமணி தோல்வியைத் தழுவினார். இந்த சூழ்நிலையில், தனது மூத்தமகள் காந்திமதியின் மகன் பரசுராமன் முகுந்தனை அரசியல் களத்திற்கு வெளிப்படையாக கொண்டு வந்துள்ளார் மருத்துவர் ராமதாஸ். கடந்த 2 ஆண்டுகளாக பாமகவின் டிஜிட்டல் பிரிவின் செயல்பாடுகளை கவனித்து வந்தார் முகுந்தன். கட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டப்படும் சுவரொட்டிகளில் மெல்ல மெல்ல இடம்பிடிக்கவும் ஆரம்பித்தார்.
இப்போது வெளிப்படையாக கட்சியின் இளைஞரணித் தலைவராக ராமதாஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு அன்புமணி தரப்பில் கடும் எதிர்ப்பு அந்த மேடையிலேயே தெரிவிக்கப்பட்டது. அன்புமணியின் மகள் சங்கமித்ர, சம்யுக்தா ஆகியோர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாயார் சௌமியாவுக்காக வாக்கு சேகரித்தனர். அப்போதில் இருந்தே கட்சிக்குள் அன்புமணியின் வாரிசாக அவரது மகள் வரக்கூடும் என பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் பேரன் பரசுராமன் முகுந்தனை இளைரணித் தலைவராக கொண்டு வந்துள்ளார் மருத்துவர் ராமதாஸ்.

மற்ற கட்சிகளை குடும்ப கட்சி என்று கடுமையாக விமர்சித்த மருத்துவர் ராமதாஸ் இன்று தனது கட்சிக்குள் மகன், மருமகள், பேரன், பேத்தி என அனைவரையும் பொறுப்புகளில் அமரவைத்து அழகு பார்ப்பது சரிதானா அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். போதாக்குறைக்கு தமிழ்நாட்டை சீரழிப்பதில் மதுவுக்கு நிகராக சினிமாவும் ஒன்று என முழங்கியவர் ராமதாஸ். குறிப்பாக நடிகர்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்தவர் அவர். இன்று அவரது பேத்தி சங்கமித்ரா தமிழ் திரைப்படத்துறையில் தடம் பதித்துள்ளார். அலங்கு என்ற படத்தை தயாரித்துள்ளார். அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதெல்லாம் காலத்தின் முரண்நகை அல்லாமல் வேறென்ன என்று கேட்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
40 ஆண்டுகால அரசியல் பயணத்தில் எதையெல்லாம் எதிர்த்து களம் கண்டாரோ இன்று அதையெல்லாம் அனுசரித்து அரசியல் செய்ய பழகி விட்டாரா என்று கேள்வி எழுப்புகிறது அரசியல் உலகம். கேட்கிறதா மருத்துவர் ராமதாஸ் அவர்களே?...
இதையும் படிங்க: 1000 ரூபாய் யாருக்கு வேணும்..பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு தான் வேணும்..போராட்டக்களத்தில் கர்ஜித்த சௌமியா அன்புமணி ..!