தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை ஏற்றுக்கொள்ளாமல் கிடப்பில் போட்டார். அன்று முதல் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதை பலரும் விமர்சனம் செய்தனர்.
குறிப்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்திலும் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதனிடையே சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அமைத்த குழு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்படி சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டார். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் சேர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்தார்.
இதை அடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும்.
இதையும் படிங்க: ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடு.. பாஜகவுக்கு சவுக்கடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் செல்வபெருந்தகை!

10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆளுநர்களுக்கு காலக்கெடுவை நிர்ணயம் செய்து மாநில உரிமைகளை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாதுகாத்துள்ளது.
மக்களால் தேர்வு செய்யப்படாதவர்கள் அதிகார மையமாக மாறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும். கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகளின் ஆதரவாளரான கலைஞரின் அடிச்சுவடிகளை பின்பற்றிய மாநில அரசை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மனம் குளிரும் பினராயி விஜயன்!