மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் பேசிய அவர், எல்லோரும் எல்லாம், எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவ சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற லட்சியத்திற்காக கூட்டணி அமைத்துள்ளதாகவும், மாற்றத்தை நோக்கியதாக நமது பயணம் திகழ்கிறது என்றும் தெரிவித்தார். நாம் யாரை எதிர்க்க வேண்டும்? எதற்காக எதிர்க்க வேண்டும்? என்பதில் தீர்மானமான முடிவோடு இயங்கிக் கொண்டுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விடாதா என்று நப்பாசையுடன் சிலர் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது, அதற்கு யாரும் இடம் தர மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்தியாகணும்.. மதசார்பற்ற சக்திகள் ஒன்னு சேருங்க.. அழைப்பு விடுக்கும் பிரகாஷ் காரத்.!!

கூட்டாட்சி என்ற சொல் மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜியாக உள்ளது என்றும் மாநில உரிமைகளுக்காக பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை., பாஜகவின் எதேச்சதிகார தன்மையால் அதிகமாக பாதிப்படைபவர்களில் முதன்மையாக இருப்பது தானும், பினராய் விஜயனும் தான்.,நாங்கள் இங்கு பேசுவதை வாக்குமூலமாக கூட எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். மாநில சுயாட்சி என்பது திமுகவின் கொள்கை என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் சமுதாயத்தை காக்க, தேசிய இனங்களை காக்க, மாநிலங்களின் சுயமரியாதையுடன் வாழ சுயாட்சி தீர்மானம் விளங்கிக் கொண்டுள்ளதாகவும், மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து போராடி வருவதாகவும் கூறினார்.

மாநில அரசுகள் டெல்லிக்கு காவடி தூக்கும் நிலையை மாற்றி அதிகார பரவலுக்கு வழிவகுக்கும் அணுகுமுறையாக இருக்கும் என சொல்லி பிரதமரான மோடியின் ஆட்சி தான்… மாநிலங்களை அழிக்கும் ஆட்சியாக, மாநில மொழிகளை சிதைக்கும் ஆட்சியாக, பல தேசிய இன மக்களை ஒழிக்கும் ஆட்சியாக, பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட மக்களின் நம்பிக்கைகளை சிதைக்கும் ஆட்சியாக மற்றும் அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை டம்மியாக மாற்றி ஒற்றை ஆட்சி என்ற பாசிச ஆட்சியாக இன்றைய பாஜக, ஆட்சி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே தேர்தல், ஒரே பண்பாடு என்ற ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு கட்சி ஆட்சியாக அமைந்தால்... ஒரே நபரின் கைகளில் அதிகாரத்தை குவிக்க தான் அது பயன்படும் என்றும் பிறகு அந்த தனி மனிதர் வைத்தது தான் சட்டம்! அவர் சொல்வது தான் வேதம்! அவர் அங்கீகரிப்பவருக்கு மட்டும்தான் அதிகாரம்! அவரால் ஆசிர்வதிக்கப்படுபவருக்கு மட்டும்தான் நிதி மூலதனம்...என்று ஆகிவிடும் என எச்சரித்தார். மாநிலங்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது, தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டும் கூட பிரதமர் மோடி பதில் சொல்லவில்லை, அரசியல் சட்ட உரிமைகளை பறிக்கும் ஆட்சியை பாஜக நடத்துகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பாஜகவை ஆட்டிப் படைக்கிறது ஆர்.எஸ்.எஸ்..! பிரதமரை வசைப்பாடிய டி.ராஜா..!