மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். தற்போதையை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மாநிலச் செயலாளர் நியமனம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளின் படி 72 வயது வரை மட்டுமே மாநிலச் செயலாளர் பதவி வகிக்க முடியும். தற்போது மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு 71 வயதாவதை அடுத்து அவருடைய பதவிக்காலம் நிறைவடைந்தது. இதற்கு முன்னதாக தனக்கு 71 வயதாவதால் தன்னைக் கட்சியில் இருந்து நீக்கும் படி அவரே மாநாட்டில் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து மாநாட்டில் இருந்த 81 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான புதிய மாநிலச் செயலாளரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

கடந்த 2 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பெ.சண்முகம்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவரமைப்பான எஸ்எஃப்ஐ மற்றும் டிஒய்எஃப்ஐ-யில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர். சிபிஎம் மாநில செயலாளராக நல்லசிவம் இருந்த போது, வாச்சாத்தி கிராம பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை வழக்கை நீண்ட நெடிய போராட்டத்திற்கு மத்தியில் இறுதி வரை நடத்தியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக பணியாற்றியுள்ளார்.

2022ம் ஆண்டு நடைபெற்ற மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முதல் முறையாக மத்திய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
மதசார்பற்ற கட்சிகளுடன் தொடர்ந்து செயல்படுவோம்:
மதவெறி சக்திகளுக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து வீரியம் மிக்க போராட்டங்களை மேற்கொள்வோம் என்றும், தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறை நீங்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றும் புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பெ.சண்முகம் உறுதிபட தெரிவித்துள்ளார்.