தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் ஒப்பந்தம் சார்பாக டிவிஹச் குழுமம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களான கோயம்புத்தூர், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 7:00 மணியிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். இந்த நிறுவனம் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவின் நெருங்கிய உறவினர்களுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

இந்நிலையில் தில்லை நகர் ஐந்தாவது தெருவில் உள்ள கே. என். நேருவின் மகனும் பெரம்பலூர் எம்பியுமான அருண் நேருவின் இல்லத்திலும், கே.என்.நேருவின் சகோதரரான மறைந்த தொழிலதிபர் ராமஜெயம் வீடு அமைந்துள்ள தில்லை நகர் பத்தாவது குறுக்கு தெருவிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இது தவிர சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்ஆர்ஜி நகர் உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்ததுறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சர் கே கே என் நேருவின் மற்றொரு சகோதரரும் டிவிஹெச் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவருமான மணிவண்ணனுக்கு சொந்தமான கோவை இல்லத்திலும், கோவை திருச்சி சாலையில் உள்ள டிவிஹெச் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருச்சியில் அருண் நேருவின் வீட்டில் ஏறத்தாழ 10 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த சோதனை மாலை 5:30 மணி அளவில் சோதனை நிறைவு பெற்றதாக கூறப்பட்ட நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி பரிவர்த்தனை குறித்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ரெய்டு... சிக்கிய முக்கிய ஆவணங்கள்?
அதாவது கே.என். நேரு குடும்பத்தினர் கணக்கு வைத்திருக்கும் இரு முக்கிய வங்கிகளை சேர்ந்த அதிகாரிகளை நேரு வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். கைப்பற்றிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்டி விசாரணை நடத்தினர் பின்னர் முக்கிய ஆவணங்களை ஒரு வெள்ளைநிற பெட்டியில் வைத்து அமலாக்கத்துறையினர் காரில் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சோதனையின் போது பணம் ஏதாவது கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து அமலாக்கத்துறை எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க: அங்கு என்ன தெரிகிறது..? அமைச்சர் வீட்டின் முன்பு சாவகாசமாக சேர் போட்டு உட்கார்ந்த திமுகவினர்..!