கொள்ளையர்களின் பார்வை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் பெறப்பட வேண்டும், புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட வேண்டும், வேலையில்லாத் திண்டாட்டம் அறவே ஒழிய வேண்டும், தொழிலதிபர்களின் பார்வை தமிழ்நாட்டின் பக்கம் திரும்ப வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இது நிகழ்ந்துள்ளது என கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சாதகமான தொழில்களை கண்டறிந்து, அதுகுறித்த அறிக்கைகளை அரசுக்கு அனுப்பி, அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்பு, அங்கு தொழில்களை அமைக்க தொழிலதிபர்களுக்கு உதவும் மையங்களாக மாவட்ட தொழில் மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மாவட்ட தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவசர, அவசரமாக டெல்லி கிளம்பிய அண்ணாமலை... எடப்பாடி என்ன சொன்னார் தெரியுமா?

ஆனால், கடந்த நான்காண்டு கால தி.மு.க. ஆட்சியில் இவற்றின் செயல்பாடுகள் குறைந்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், பல மாவட்டங்களில் பொது மேலாளர்கள் ஓய்வு பெற உள்ளதால் அனைத்து மாவட்ட தொழில் மையங்களிலும் திட்டப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.அமெரிக்காவைச் சேர்ந்த கேரியர் குளோபல் நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு தன்னுடைய முதல் தொழிற்சாலையை இங்கு அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அந்த நிறுவனம் தற்போது 1000 கோடி ரூபாயை ஆந்திராவில் முதலீடு செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டை நோக்கி வரவேண்டிய முதலீடுகள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு செல்வதாகவும், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் இந்த நிலைமை மாற வேண்டுமென்றால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட வேண்டும் என்பதோடு, தொழில் முதலீடுகளை ஈர்க்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மாவட்ட தொழில் மையங்கள் அனைத்திலும் பொது மேலாளர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொழில்கள் வளர்ந்தால்தான் தொழிலாளர்கள் வாழ முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்தது பிரிந்ததுதான்.. இனி சேர்வதற்கு சாத்தியமே இல்லை.. இபிஎஸ் திட்டவட்டம்..!