திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியைப் படிக்கவில்லை என்றால் யாசகம்கூட எடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆனால், இந்தி படித்தவர்கள், இந்தி தெரிந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும் தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்கக் கூடாது என முதல்வர் வலியுறுத்தி வருகிறார். அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. முறைகேடாக தேர்தல் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் போலி உறுப்பினர்களை நீக்கிவிட்டு உண்மையானவர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தலை கூட்டுறவு தேர்தல் ஆணையம்தான் நடத்த வேண்டும்.
கூட்டுறவுத் தேர்தலை நடத்த திமுக அரசுக்கு எந்த அச்சமும் இல்லை. கூட்டுறவுத் துறையில் பணியாளர்கள் தவறு செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை அரசு கண்டுகொள்ளாமல் இல்லை. உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுத்துதான் வருகிறது. இதைதான் அரசு செய்ய முடியும். தூத்துக்குடியில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றபோது டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் முதல்வர் உன்னிப்பாகக் கவனித்து குற்றங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார். மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் உரையாடலை ஒட்டு கேட்பது முற்றிலும் தவறு ஆகும்.
இதையும் படிங்க: கலெக்டர் ஆபிஸ் அருகே கஞ்சா விற்பனை..? வடமாநில தொழிலாளர்கள் துணிகரம்.. கட்டிட தொழிலாளி 3 பேர் கைது..!

விஜய் கட்சி தொடங்கியிருப்பது 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகுதான் யாருக்குப் பாதிப்பு என்று தெரியும். திமுக தேர்தல் களத்தில் என்றும் பின்வாங்கியது இல்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல திமுக. 75 ஆண்டுகளை கடந்த ஓர் அரசியல் இயக்கம். ஆனால், தற்போது கட்சியைத் தொடங்கியவர்கள் நான்தான் முதல்வர் என்று கூறிக் கொள்கின்றனர்” என்று பெரியகருப்பன் தெரிவித்தார்.

மேலும் அவரிடம், அதிமுக குறித்து ஏன் விஜய் பேசவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு பெரியகருப்பன், “இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித் தலைவரிடம் கேளுங்கள் அல்லது ஸ்டெப்னி செங்கோட்டையனிடம் கேளுங்கள் அல்லது டயர், டியூப் என அனைத்தும் கழற்றி வைத்த ஓ.பன்னீர்செல்வத்திடம் கேளுங்கள்” என்று அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: மொழி திணிப்பை கை விடுங்க! அமெரிக்காவில் வெடித்த போராட்டம்