நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் விலகி உள்ளார். அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் பலர் நாதகவில் இருந்து விலகி வருவதால், அடிமட்டத் தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள் என்று வரிசையாக பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இயங்கினாலும் அவற்றில் இருந்து வேறுபட்டது சீமானின் நாம் தமிழர் கட்சி. அதாவது கட்சி தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை நடந்துள்ள எல்லா நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் தவறாமல் போட்டியிட்ட கட்சி என்றால் அது நாம் தமிழர். ஆனால் இதுவரை எந்த இடத்திலும் அந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை.

வேறு ஏதாவது கட்சியில் இவ்வாறு இருந்தால், கைக்காசைப் போட்டு செலவழித்து எதற்காக வீணாக வேண்டும் என்று பலர் விலகி இருப்பார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியின் கதையே வேறு. தேர்தலில் வெற்றிபெறுகிறோமோ, இல்லையோ, கொள்கைப் பிடிப்புடன் களமாடும் தம்பிகள் நிறைந்த கட்சி அது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இதையும் படிங்க: சீமான் மீதான தொடர் அதிருப்தி! நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகி!
ஆனால் சமீபகாலமாக, அந்த கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறி வருகின்றனர். இது எங்கள் கட்சியின் களையுதிர் காலம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை எளிதாக கூறி கடந்து சென்று விட்டார். ஆனால் தொண்டர்கள் அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை என்பதை சமூக வலைதளங்களில் பதிவிடும் தம்பிகளின் பதிவுகளைப் பார்த்தாலே தெரிகிறது.

சமீபத்தில் கூட அக்கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த காளியம்மாள் நாம் தமிழரில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக கூறியிருந்தார். இவர்கள் யாரும் தேர்தலில் வெற்றி பெறவில்லை, தாங்கள் எம்எல்ஏவாக ஆக முடியவில்லை என்பதால் விலகவில்லை. எந்த சீமானால் ஈர்க்கப்பட்டு கட்சிக்குள் வந்தார்களோ, அதே சீமானின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாகவும் கூறி வெளியேறி வருகின்றனர்.
அந்தவரிசையில், நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகி உள்ளார். கட்சியை சீமான் வீழ்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார் என அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். அதுவும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் இன்று செல்லும் நிலையில் பாவேந்தன் விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளைப் போல நமக்கு உறுதியான தொண்டர்கள் வாய்த்து விட மாட்டார்களா என்று ஏங்கும் அளவுக்கு இருந்தது ஒருகாலம். இதனை சீமான் நினைவில் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்...
இதையும் படிங்க: தூக்கி அடித்தார் காளியம்மாள்..! நாம் தமிழர் கட்சியிலிருந்து அதிரடியாக விலகல்..!