வக்ஃபு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃபு திருத்த மசோதாவை மாநிலங்களையில் மேதா குல்கர்னி எம்.பி. தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சர்ச்சைக்குரிய பகுதிகளை, பரிந்துரைகளை நீக்க வேண்டும் என்று அவையில் முழுக்கமிட்டனர்.
வக்ஃபு திருத்த மசோதா 2024, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பரிந்துரைக்கப்பட்டது. வக்ஃபு சட்டம் 1995ல் பல்வேறு திருத்தங்களைச் செய்து, அதை ஒழுங்குமுறைப்படுத்தி, வக்ஃபு சொத்துக்களை முறைப்படுத்தவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

ஆனால் எதிர்க்கட்சிகள் வக்ஃபு திருத்த மசோதா குறித்த கூட்டுக்குழு அறிக்கையை தாக்கல் செய்யவிடாமல் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவையை சிறிது நேரம் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தனகர் ஒத்திவைத்தார். பின்னர் அவை மீண்டும் கூடியதும் அவைத் தலைவர் ஜெகதீப் தனகர் அவையை நடத்த முயன்றபோது எதிர்க்கட்சி எம்பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி பிரச்சனைக்கு பாஜக காரணமா? - செல்லூர் ராஜு பதிலடி...!
காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில் “ வக்ஃபு வாரிய திருத்த மசோதா குறித்த கூட்டுக்குழு அறிக்கையின் போலி அறிக்கையை நாங்கள் ஏற்க முடியாது, எங்கள் கருத்துக்களையும் நசுக்க முடியாது. இந்த அறிக்கை மீண்டும் நாடாளுமன்றக் கூட்டுகுழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மீண்டும் திருத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்தக் கூட்டுக்குழு அறிக்கையில், ஏராளமான உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த எம்.பி.க்களின் கருத்துக்களை புறக்கணித்து அவர்களின் கருத்துக்களை நசுக்குவது சரியானதல்ல. இது ஜனநாயகத்துக்கே எதிரானது.போலி அறிக்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம். எதிரான கருத்துக்கள் இல்லாத அறிக்கையை மீண்டும் கூட்டுக்குழுவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார். கூட்டுக்குழுவில் இருந்த இந்தியா கூட்டணியைச்ச சேர்ந்த பல எம்.பி.க்கள் அறிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தனர். கூட்டுக்குழுக் கூட்டத்தின்போது ஒவ்வொரு பகுதியாக விவாதம் நடத்த வேண்டும் என்று கேட்டும் நடத்தவில்லை. இதனால்தான் நாங்கள் எதிர்கருத்து நோட்டீஸ் வழங்கினோம்.

ஆனால் இதை கூட்டுக்குழு அறிக்கையில் சேர்க்கவில்லை என சிவசேனா உத்தவ் கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த் தெரிவித்தார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில் “ எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்பு குறிப்புகள் கூட்டுக்குழுவின் இணைப்புப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது, எதிர்க்கட்சிகள் அவையை தவறாக வழிநடத்த முயல்கிறார்கள். அறிக்கையில் எதையும் நீக்கவும் இல்லை, அழிக்கவும் இல்லை. தேவையற்ற சம்பவங்களை பிம்பத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா பேசுகையில் “ சிலர் தேசத்தின் நலனுக்கு எதிராக சண்டையிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக மட்டும் சண்டையிடவில்லை, இந்தியாவுக்கு எதிராகவும்தான்” எனத் தெரிவித்தார். மாநிலங்களவையில் நடந்த கூச்சல் குழப்பம், எதிர்க்கட்சிகளின் போராட்டம், அமளிக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிக்கை ஏற்கப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தனகர் அறிவித்தார்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு தனது அறிக்கையை பலமாதங்கள் விவாதத்துக்குப்பின் மக்களவையில் கடந்த மாதம் 30ம் தேதி தாக்கல் செய்தது. இந்த கூட்டுக்குழுவில் 14 திருத்தங்கள் ஏற்கப்பட்டன, எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூறிய திருத்தங்கள் ஏற்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஸ்டாலினா..? ம்ஹூம்... விஜய்தான் சாட்டையை சுழற்றுவது போல் தெரிகிறது' - செல்லூர் ராஜூ கிண்டல்