ஆர்.பி.உதயமானவர் சமீப காலம் வரை பாஜக தலைவர் அண்ணாமலை துவங்கி அத்தனை தரப்பையும் தாறுமாறாக விமர்சித்து வறுத்தெடுத்து வந்தார். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பியதுதான் தாமதம், படாரென ‘இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா’ என்று புகழாரம் சூட்டி வீடியோ வெளியிட்டு சொந்தக் கட்சியினரையே கதிகலங்க வைத்து விட்டார்.

அரசியல் லாபத்திற்கென காலத்திற்கொரு கோலம், நேரத்திற்கொரு நிறம் மாறும் சாகச மந்திரக்காரர் என்று அதிமுக கட்சி நிர்வாகிகளே விமர்சனங்களால் ஆர்.பி.உதயகுமாரை வெளுத்தெடுத்து வருகின்றனர். 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக மாநில மாணவர் அணி செயலாளராகவும், மதுரை, விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர் ஆர்.பி.உதயகுமார். சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றதை அடுத்து தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: இது வாயா? இல்ல வடை சுடற இடமா? இந்தியவின் இரும்பு மனிதர்: வாழும் வல்லபாய் அமித்ஷா..! RBU புகழராம்..!

முதல்வர் ஜெயலலிதாவிடம் பணிவும், பக்தியும் கொண்டவர் ஆர்.பி.உதயகுமார். 2011ம் ஆண்டு மே மாதம் அமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து இவர் சட்டசபை, கட்சி அலுவலகம், தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது காலில் செருப்பு அணியாமல்தான் சென்று வந்தார். பலரையும் இது வியப்பில் ஆழ்த்தியது. இதுபற்றி காரணம் கேட்டதற்கு, ''அம்மாவே என் தெய்வம். அவர் இருக்கும் இடம் கோவில். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை. அதுபோல எனக்கு தெய்வமாக விளங்கும் அம்மா இருக்கும் இடம்தான் எனது கோவில்'' என்றார்.

வாழ்நாள் முழுவதும் முதல்வர் அம்மா, கட்சி அலுவலகத்துக்கு வருவதாலும், சட்டசபைக்கு வருவதாலும், தலைமைச் செயலகத்துக்கு வருவதாலும் அந்த இடம் எனக்கு கோவிலாக தெரிகிறது. அதனால் இந்த 3 இடத்துக்கும் செருப்பு போடாமல் எனது பணியை தொடருகிறேன். வாழ்நாள் முழுவதும் இதனை தொடர்ந்து கடைபிடிப்பேன் என்று கூறினார். இவர் செருப்பு அணியாமல் இருந்த தகவல் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்றது. அதை அவர் ரசிக்கவில்லை. அவரை அழைத்த ஜெயலலிதா, இனிமேல் செருப்பு அணியாமல் கோட்டைக்கு வரக் கூடாது என அவருக்கு உத்தரவிட்டார். அப்போது முதல் மீண்டும் செருப்பணியத் தொடங்கினார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்போது முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். அப்போது, இதே ஆர்.பி உதயகுமார் தான், மொட்டை அடித்துக் கொண்டு ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து கொண்டு ''சசிகலா தான் முதலமைச்சாராக வேண்டும். ஓ.பி.எஸ் முதல்வர் பதவிக்கு அன்ஃபிட்'' என்று கூறியிருந்தார்.

ஆனால், அதன்பிறகு இவரே ''ஓ.பி.எஸ் அவர்களிடமிருந்து விசுவாசத்தை கற்றுக் கொண்டோம்'' என அந்தர் பல்டி அடித்தார். கட்சிக்குள் சசிகலா வந்தபோது, தனது திருமங்கலம் தொகுதியையே ராஜினாமா செய்து, அவருக்கு தாரை வார்க்க தயார் என்று அறிக்கை விட்டு அசத்தினார். அடுத்த சில காலங்களில் சசிகலாவின் காலை வாரியதில் முதலிடம் பிடித்தார்.

ஓ.பி.எஸுக்கு ஆதரவாகி எம்.பி., தேர்தலின் போது அவரது மகனுக்காக களத்தில் உழைப்பதாக படம் காட்டியவர், அடுத்த சில நாட்களில் படக்கென்று கட்டம் கட்டி ஓ.பி.எஸையே காலி செய்ததிலும் இவரே முதலிடம் பிடித்தார். ரத்தத்தை தேடும் அட்டையாக எங்கு லாபத்திற்கான பசை இருந்தாலும் சூழ்நிலைக்கு தக்கதாக பச்சென ஒட்டிக் கொண்டு இவர் பஜனை பாடுவதைக் கண்டு கட்சித் தொண்டர்களே அரண்டு போய் இருக்கிறார்கள். இப்போதும் செங்கோட்டையன் முந்துவதால், எடப்பாடி பழனிசாமியை தூர தொலைத்து, தன் அரசியல் பயணம் தடையின்றி தொடர செங்கோட்டையன் புகழ்பாடி பயணிக்கவும் தயாராகி வருகிறார் என்று விவரமறிந்தவர்கள் ஆர்.பி.உதயகுமார் குறித்து விலாவாரியாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளாக வரி பாக்கி: ஆர்.பி.உதயகுமார் அலுவலகம் முன் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி..!