அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இலங்கை சென்று இருந்தார். அங்கு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிய நிலையில், அவருக்கு அந்நாட்டு உயரிய விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமரின் பயணம் தொடர்பாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இலங்கை சென்று பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் கச்சத்தீவு மீட்பு பற்றி ஒரு வார்த்தை கூட இலங்கை அதிபரிடம் பேசவில்லை, இது தமிழகத்திற்கு செய்யும் துரோகம் என கூறினார்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் முக்கிய தேவையான கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதகாவும், இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதிய நிலையில், இதை அலட்சியம் செய்துள்ள பிரதமர் மோடி, முக்கிய பிரச்சனை பற்றி இலங்கை அதிபரிடம் எதுவும் பேசாமல் திரும்பியுள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: முதலில் தமிழில் கையெழுத்துப் போடுங்கள்… திமுகவினரின் மொழிப்பற்றை தோலிரித்த பிரதமர் மோடி..!

இலங்கை பொருளாதாரம் கடும் பாதிப்பிற்குள்ளான பிறகு, இந்தியாவின் நிதி உதவிகள், இதர உதவிகளை நம்பியுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் நலன்கள் மற்றும் கச்ச தீவு மீட்பு குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு பெரும் வாய்ப்புகள் கிடைத்தும் மோடி அரசு இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள மறுத்து வருவதாக கூறினார். இது தமிழர்கள் மீதான மோடி அரசின் பாரபட்சத்தை, அலட்சியத்தை காட்டுகிறது என கூறியுள்ள அவர், தமிழகம் இருக்கும் இடத்தில் குஜராத்தும், குஜராத்திகளும் இருந்து, குஜராத் மீனவர்கள் இதே போல பாதிக்கப்பட்டிருந்தால், மோடி இப்படி நடந்து கொள்வாரா என்ற கேள்வி எழுப்பினார்.

தமிழகத்திற்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், சிலர் அழுது கொண்டே உள்ளதாக, கூசாமல் பிரதமர் பச்சைப் பொய்யை பேசியுள்ளதாகவும், தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பதை மறைத்து தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார் என்றும் தெரிவித்தார். ஏமாற்று வேலைகள், பொய்கள், துரோகங்களுக்காக பாஜகவிற்கும், மோடிக்கும் தமிழக மக்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி... எல்லாம் செய்தும் திமுக ஒப்பாரி வைக்கிறது- சல்லி சல்லியாய் உடைத்த மோடி..!