தமிழக பட்ஜெட்டில் '₹' என்கிற ரூபாயின் குறியீட்டுக்குப் பதிலாக 'ரூ' என்கிற தமிழ் குறியீட்டைப் பயன்படுத்தியது சர்ச்சையாகி உள்ளது. திமுக அரசின் நடவடிக்கையை பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்த்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்திருந்தார். இதனால் இந்த விவகாரம் தொடர்பாக திமுக - பாஜகவினர் இடையே வாக்குவாதங்கள் சோஷியல் மீடியாவில் வலுத்துள்ளன. என்றாலும், இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் பலரும், ரூபாய் குறியீடு பற்றி கவலைப்படாமல் ரூபாய் மதிப்புப் பற்றி கவலைப்படுங்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்து வருகின்றனர்.

'₹' என்ற ரூபாய்க்கான குறியீடு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு, இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியைத் திணிப்பதாக மத்திய அரசு மீது திமுக ஆதரவு நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே ரூபாயின்'₹' என்கிற குறியீட்டுக்குப் பதில் தமிழ் எழுத்தான 'ரூ' என்பதை பயன்படுத்தப்படுகிறது என்கின்றனர். '₹' என்கிற குறியீடு தேவநாகரி எழுத்து. இந்தத் தேவநாகரிதான் இந்தி- சமஸ்கிருதத்துக்கான எழுத்து முறை என்பதால், தமிழை பிரதானப்படுத்தும் முயற்சி இது என்றும், தமிழும் இந்தியாவி ஒரு மொழிதானே என்றும் திமுக ஆதரவு நெட்டிசன்கள் பாஜகவினருக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூபாய் (₹) சின்னத்தை உருவாக்கியது யார்..? தமிழகத்துக்கு என்ன தொடர்பு..? கதை தெரியுமா..?

அதே நேரத்தில், இந்தக் குறியீடு காங்கிரஸ் - திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றும் இதை மாற்றுவதுபிரிவினைவாத எண்ணம் என்றும் அடுத்து புதிதாக ரூபாய் நோட்டு அடிப்பீர்களா, கருணாநிதி நூற்றாண்டு நாணயத்தில் இடம்பெற்றுள்ள '₹' குறியீட்டை நீக்குவீர்களா என்றும் கேள்வி எழுப்பி பாஜக ஆதரவு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் வட இந்தியாவில் செயல்பட்டு வரும் இந்தி, ஆங்கில மொழி ஊடகங்கள் இந்த விவகாரத்தைத் தேசியப் பிரச்சினையாக விவாதிக்கின்றன;
ஏற்கனவே மும்மொழி கல்வி, தொகுதி சீரமைப்பு போன்ற விஷயங்கள் தமிழகத்தில் பேசு பொருளாகியுள்ள நிலையில் தற்போது ரூபாய் குறியீடும் அடுத்தக் கட்டத்துக்குப் பாதை அமைத்துக் கொடுத்துள்ளது. இதனிடையே திமுக அரசின் இந்த நடவடிக்கையை பிற மாநில அரசுகள் எப்படி பார்க்கின்றன என்கிற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்குக் கர்நாடகத்திலிருந்து ஆதரவுக் குரல் எதிரொலித்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடகா அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே கூறுகையில், "மாநில அரசுகளை கையாளும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மத்திய அரசு தந்னுடைய கடமையைச் சரிவர செய்யவில்லை. அதனால்தான் இத்தகைய நிலைப்பாடுகள் எடுக்கப்படுகின்றன. திமுக அரசின் இத்தகைய முடிவு, மத்திய அரசுக்கான எச்சரிக்கை" என்று கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு மீண்டும் எம்.பி. பதவி.. திமுகவிடம் கேட்குமா பாமக.? ராமதாஸ் ரியாக்ஷன் என்ன?