மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ‘ரூ’ என்கிற எழுத்தை பெரிதாக வைத்தோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூபாயின் '₹' குறியீட்டுக்குப் பதிலாகத் தமிழில் 'ரூ' இடம் பெற்றது. இந்த விவகாரத்தில் திமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'உங்களில் ஒருவன்' என்னும் பெயரில், திமுக அரசின் மீது எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், "மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே ‘ரூ’-என்று வைத்திருந்தோம். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள். அதை பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள்.
ஒன்றிய அரசிடம், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், பேரிடர் நிதி வழங்க வேண்டும், பள்ளிக்கல்வி நிதியை விடுவிக்க வேண்டும், தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்களை வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதில் பேசாத ஒன்றிய நிதியமைச்சர், இதைப் பற்றி பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையமா? இ.பி.எஸ். கண்டனம்

அவர்களே (பாஜக), பல பதிவுகளில் ரூ என்றுதான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்திலும் எல்லாரும் Rupees- என்பதை எளிமையாக Rs-என்றுதான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாக தெரியாதவர்களுக்கு, இதுதான் பிரச்சினையாக தெரிகிறது போல. மொத்தத்தில், இந்திய அளவில் நம் பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்! இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 21ஆம் தேதி வரை மழை! கூல் அப்டேட் கொடுத்த வானிலை மையம்