தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் கைது செய்யப்படுவதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தர்காவை ஆய்வு செய்ய எம்.பி. நவாஸ் கனி தலைமையில் சென்ற இஸ்லாமிய குழுவினர், அங்கு பிரியாணி சாப்பிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து, இன்று திருப்பரங்குன்றம் கோயில் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக இந்து முன்னணி அமைப்பினர் அறிவித்திருந்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இரு மதங்களுக்கு இடையே அசாதாரண சூழலை தவிர்க்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்றும், இன்றும்144 தடை உத்தரவை பிறப்பித்தார்.
இந்து அமைப்பினர் வளைத்து, வளைத்து கைது:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இந்து அமைப்பினரை வீட்டு காவலில் வைத்துள்ள போலீசார், சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். திருப்பூரில் இருந்து கையில் வேலுடன் திருப்பரங்குன்றம் புறப்பட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை தாண்டா இங்க கெத்து..! உள் கட்சி எதிரிகளின் வயிற்றில் புளியை கரைத்த அமித்ஷா..!

இதேபோல் பழனியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற திண்டுக்கல் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷித் துணைத் தலைவர் ராம சற்குணம், தூத்துக்குடியில் இந்து முன்னணி மாநில அமைப்பு செயலாளர் சுந்தர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஒன்றிய பொறுப்பாளர் ராகவேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் 12 பேர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் ஜி. பாண்டுரங்கன், கோயம்புத்தூர் நகர மாவட்டத் தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன், சேலம் நகர மாவட்டத் தலைவர் சசிக்குமார் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்துக்கே 144 தடையா?
இந்து அமைப்பினரின் போராட்டத்தை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இந்து அமைப்பினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் பாஜகவினரும் அடக்கம். தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் கைது செய்யப்படுவதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை தொடர்பான நிகழ்வுகளில், இந்து மத விரோதமாகச் செயல்படும் அமைப்புகளைக் கண்டித்தும், பாரபட்சமாகச் செயல்படும் திமுக அரசைக் கண்டித்தும், ஆலயத்தின் புனிதத்தைக் காக்க இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க, மதுரை மாவட்டம் முழுவதும் திமுக அரசு 144 தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் முழுவதுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போல் உள்ளதாக விமர்சித்துள்ளார்.
தமிழக அரசுக்கு எச்சரிக்கை:

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு. திமுக அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் துணைசெல்வதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஞானசேகருடன் பேசிய திமுகவின் யார் அந்த சார்..? ஆதாரத்துடன் வெளியிடுவேன்… அண்ணாமலை சவால்..!