டாஸ்மாக் விவகாரத்தில் திமுக வசமாக சிக்கிக் கொண்டுள்ளது என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர். சேகர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழல் என்பது மூன்று வகையாக உள்ளது. முதல் வகை, தயாரிப்பு ஆலையில் ஊழல், இரண்டாவது வகை, டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல், மூன்றாவது வகை, பாட்டில் மற்றும் போக்குவரத்தில் ஊழல். இப்படியாக ஊழல் நடைபெற்றுள்ளது.

மது தயாரிப்பு ஆலைகள் 100 பாட்டில்கள் கணக்கை காட்டிவிட்டு, 200 பாட்டில்கள் விற்பனை ஆனதாக கூறி ஊழல் செய்துள்ளன. இது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட ஆலைக்கு மட்டும் டெண்டர் வழங்குவது உள்ளிட்ட விவகாரத்தில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்களுக்கு ஊழலில் தொடர்பு உள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை மூலம் தெரியவந்துள்ளது. இதில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது.

டாஸ்மாக் விவகாரத்தில் திமுக தற்போது வசமாக சிக்கிக் கொண்டுள்ளது. எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் 28 சதவீத மக்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். மேலும் 23 சதவீத மக்களுக்கு மதுப் பழக்கம் உள்ளது. மதுவில் கலப்படம் செய்கிறார்கள். டாஸ்மாக் நிறுவனத்தில் செய்யப்படும் விஷயங்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. அமலாக்கத்துறை சோதனை இன்னும் பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தும். அமலாக்கத்துறை விசாரணையை சட்டப்படி சந்திப்போம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். அவர் சட்டப்படி சிறை செல்ல உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: பொத்தாம் பொதுவாக ஊழல்னு சொன்னா எப்படி? உரிய விசாரணை நடத்துங்க - பிரேமலதா காட்டம்
இதையும் படிங்க: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: கள்ள உறவால் துணிச்சல்… திமுக அரசை சுளுக்கெடுத்த விஜய்..!