இது தொடர்பாக நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்," பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு அந்த திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்துள்ளது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை மற்ற மாநிலங்களுக்கு அளித்து விட்டது மத்திய அரசு என்றும்,தமிழக மாணவர்களை மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது, அச்சுறுத்துகிறது, மாநில உரிமைகளை தட்டிப் பறிக்கிறது என்றெல்லாம் குற்றம் சாட்டியிருப்பதோடு, இது வரையில் இல்லாத அளவில் எந்த ஒரு மத்திய அரசும் அரசியலுக்காக ஒரு மாநிலத்திற்கு எதிராக கல்வி கற்பதில் கூட கழுத்தை நெறிக்கும் அளவிற்கு நடந்து கொண்டதில்லை என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் (PM SHRI) திட்டம் கடந்த 2022 ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி தமிழகம் உட்பட நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் உயர் தர 'மாதிரி பள்ளிகளாக' உருவாக்கப்பட்ட திட்டம். இந்த திட்டத்தில் இணையுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டதையடுத்து அனைத்து மாநிலங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. தமிழக அரசும் மார்ச் 15, 2024 அன்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தன் இசைவை தெரிவித்த நிலையில், சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக் கொண்ட பின்னர் இந்த திட்டத்திலிருந்து பின் வாங்குவதாக அறிவித்தது.
அதே போல், பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டத்தில் (Samagra Siksha) திட்டத்திலும் இணைந்து செயல்பட்ட தமிழக அரசுக்கு 2023-24ம் ஆண்டுக்கு ரூபாய். 1876.15 கோடி நிதி அளித்ததோடு, 2024-25 ம் ஆண்டுக்கு ரூபாய். 4305.66 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு. ஆனாலும், மத்திய அரசின் திட்டங்களில் நீங்கள் மேலும் இணைவதற்கு மறுப்பதற்கு காரணம், வெளிப்படைத்தன்மையோடு, ஊழல் இல்லாத திட்டங்களை அளிக்கிறது மத்திய அரசு என்பதால்தானே?

இதே போல் கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட நவோதயா பள்ளிகளை துவக்க மாநில அரசு ஒப்புக்கொள்ள மறுப்பதேன்? தமிழக மாணவ, மாணவிகளுக்கு சர்வதேச தரத்தில் கல்வி வழங்குவதற்கு தடையாக மாநில அரசு இருப்பதேன்? மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஏழை மாணவ, மாணவிகள் தரமான கல்வி பயில திராவிட மாடல் திமுக அரசு தயங்குவது ஏன்? உங்களின் மலிவான, உங்களின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்கான அரசியலில் தமிழக மாணவர்களை பகடைக் காயாக வைத்திருப்பது ஏன்? இதில் அரசியலை கலப்பது நயவஞ்சக அரசியல் அல்லவா?
ஏழை மாணவர்களை உங்களின் குறுகிய அரசியலுக்காக தண்டிப்பதும், மாநில உரிமைகள் என்ற பெயரில் மத்திய அரசை மிரட்டிப் பார்ப்பதும், ஜனநாயகத்தின், குடியரசின் குரல்வளையை நசுக்கும் முயற்சி என்பதை உணர்வீர்களா? இனியேனும், ஏழை, கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொள்வீர்களா?" என்று நாரயணன் திருப்பதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய வரலாற்றில் இதுபோன்ற ஒரு மத்திய அரசு இருந்ததில்லை.. மோடி சர்க்காருக்கு எதிராக கொந்தளிக்கும் முதல்வர் ஸ்டாலின்.!