கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளிக்கும்மி கின்னஸ் சாதனை புரிந்த 16 ஆயிரம் பெண்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று பேசினார். "
வள்ளிக் கும்மியில் பங்கேற்ற 16 ஆயிரம் பெண்களுக்கு முதலில் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் என்றாலே சாதனைதான்; சாதனை என்றாலே பெண்கள்தான். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று அங்கே அவர்களுக்கு மரியாதையை செலுத்தியபின்பு, என்னை நம்பி வாக்களித்துள்ள மக்களுக்கு மட்டுமல்ல; வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்த்து இந்த ஆட்சி நடைபெறும் என்று சொன்னேன்.

அதையும் தாண்டி வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். வாக்களிக்க தவறியவர்கள் இப்படிப்பட்டவருக்கு வாக்களிக்காமல் தவறிவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும். அந்த வகையில் நிச்சயமாக எங்களுடைய ஆட்சி இருக்கும் என்று நான் உறுதியாக சொன்னேன். அப்படித்தான் இந்த மேற்கு மண்டலத்திற்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது என்று ஈஸ்வரன் தெளிவாக குறிப்பிட்டுச் சொன்னார். உங்களுடைய நன்மதிப்பையும் நாங்கள் பெற்றிருக்கிறோம். அதனால்தான், தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அமோகமான வெற்றியை, அதுவும் முழுமையான வெற்றியை பெற்றோம். அந்த 40க்கு 40 என்ற முழு வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால், நம்முடைய ஆட்சிக்கு கிடைத்திருக்கிற நற்சான்றிதழ்.

அதைப்போல் வருகிற 2026-ஆம் ஆண்டும் மீண்டும் சொல்கிறேன். நாம்தான் வெற்றி பெற போகிறோம். நம்முடைய கூட்டணிதான் வெற்றி பெற போகிறது. நிச்சயம் அது தொடரும்! ஆனால், இன்றைக்கு மோடி தலைமையில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசு, நம்முடைய ஆட்சி போல இல்லாமல், வாக்களிக்காத தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. அவர்களுடைய வஞ்சனையையும் கடந்து, வளர்ச்சியில் தமிழ்நாடு இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தில் இருக்கிறது.
இதையும் படிங்க: பிரதமர் வரும்போது ஊட்டிக்கு செல்வதா.? மன்னிப்பு கேளுங்க.. முதல்வர் ஸ்டாலினை வசைபாடும் அண்ணாமலை!

தமிழ்நாட்டிற்கு முறையாக நிதிகளை வழங்கி, தமிழ்நாட்டிற்குரிய திட்டங்களை செய்து தரும் ஒன்றிய அரசு அமைந்திருந்தால், இன்றைக்கு இந்திய அளவில் இல்லை. உலகளவில் நாம் தான் இன்றைக்கு முதலிடத்தில் இருப்போம். அந்த அளவுக்கு இன்னும் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படாது என்ற உறுதியை பிரதமர் வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். நான் தெளிவாக குறிப்பிட்டுச் சொன்னேன். பிரதமர் இன்னும் அரை மணி நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகிறார்; ராமேஸ்வரத்திற்கு வருகிறார், பாலத்தை திறந்து வைக்கப் போகிறார். அதுவும் எங்கே இருந்து வருகிறார் என்று கேட்டால், இலங்கையிலிருந்து வருகிறார்.

இலங்கையில் நம்முடைய மீனவர்கள் துன்பத்திற்கு ஆளாகக்கூடிய அந்தத் துயரத்திற்கெல்லாம் ஒரு விடிவு கிடைக்கும். அதையெல்லாம் பேசிவிட்டு வந்து இங்கே செய்தியை சொல்வார். தொகுதி மறுசீரமைப்பைப் பற்றி நாம் அழுத்தமாக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களை எல்லாம் அழைத்து விவாதித்திருக்கிறோம். அதற்குப் பிறகு தென் மாநிலங்கள் மட்டுமல்ல – வட மாநிலங்களில் இருக்கக்கூடிய மாநில தலைவர்களும், 3 முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர் பங்கேற்ற கூட்டம் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. அதில் தீர்மானம் போட்டு, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம்.
இன்னும் இதுவரை அவரிடமிருந்து ஒப்புதல் வரவில்லை.

இதற்கிடையில் நீங்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறீர்கள். வரக்கூடிய நீங்கள் அதைத் தெளிவுப்படுத்த வேண்டும், அதை விளக்கமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் மக்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாமல், தவிர்ப்பவர்களை நாம் என்ன செய்யமுடியும்; வேறு வழியில்லை. அப்படி தமிழ்நாட்டை தவிர்க்கக்கூடிய உங்களுக்கு மீண்டும் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்ற பதிலை தான் வருகின்ற தேர்தலில் நீங்கள் வழங்கிட வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்." என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எப்படி இருந்த அதிமுக இப்படி ஆயிடுச்சி.. அதிமுகவுக்காக உச் கொட்டும் கார்த்தி சிதம்பரம்.!