தமிழகத்தில் 2019 முதல் திமுக தலைமையில் சமூகநீதி கூட்டணி உருவாகி வலுவான கூட்டணியாக உள்ளது. 2019, 2021, 2024, 3 தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்று அதிமுக கூட்டணியை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டது. 2022-க்கு பிறகு அதிமுக-பாஜக கூட்டணி முடிவுக்கு வந்தது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக தேமுதிக ஓரணியிலும், பாஜக பாமக ஒரு அணியும் என இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிட்ட நிலையில் திமுக அணி 100 சதவீத வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் விஜய் தனியாக கட்சி ஆரம்பித்தார். அவரது அக்டோபர் 27 விக்கிரவாண்டி மாநாட்டில் தனது கட்சி சித்தாந்த எதிரியாக மத்தியில் ஆளும் பாஜகவையும், அரசியல் எதிரியாக மாநிலத்தில் ஆளும் திமுகவையும் பார்க்கிறது என்று அறிவித்தார். மேலும் திமுகவுடன் அதிக பகைமை பாராட்டிய விஜய் அதிமுகவை சிறிது கூட விமர்சிக்கவில்லை.
அதேபோன்று அதிமுக தலைவர்களும் தவெகவை சிறிதளவு கூட விமர்சிக்கவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்று அறிவித்திருந்த எடப்பாடி பழனிச்சாமி 2026 தேர்தலில் வெல்வதற்கு விஜய்யுடன் கூட்டணி வைப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: டைமில்ல, டைமில்ல... உச்சக்கட்ட டென்ஷனில் விஜய்... ஒர்க் அவுட் ஆகாத ’மாஸ்டர்’ பிளான்..!

தவெகவும் முறையான கட்சி அமைப்பாக உருவாகாத காரணத்தினால் 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரும் அதிமுகவும் தவெகவும் கைகோர்த்தால் பெரிய அளவில் வெற்றி பெற முடியும், ஆனால் அந்த எண்ணத்தை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆனாலும் டிசம்பருக்கு மேல் கூட்டணி பற்றி முடிவு எடுப்போம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கூட்டணி குறித்து தவெக தலைமையில் ஒருவரும் வாய் திறக்காமல் மௌனமாக இருந்தனர்.

விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதை விரும்பவில்லை என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்து இருந்தாலும், விஜய்யோ, புஸ்ஸி ஆனந்தோ அது பற்றி எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் முறையான கூட்டணி அமைக்க விட்டால் தோல்வி நிச்சயம், அதிமுகவின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்கிற நிலையில் சக தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் NDA கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததன் மூலம் NDA கூட்டணி தமிழகத்தில் உருவாவது முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அதே நிலையில் இருக்கும் நிலையில், அதிமுக தலைமையில் மீண்டும் NDA கூட்டணி உருவாகியுள்ள நிலையில், தவெக என்ன நிலை எடுக்கும் என்பது குறித்து தான் இப்பொழுது விவாதம் நடந்து வருகிறது. தவெக முடிவெடுக்கும் இடத்தில் இருந்த காலம் அதிமுக தலைமையில் NDA கூட்டணி அமைந்ததால் முடிவுக்கு வந்துள்ளது.
இனி தவெக இரண்டு முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும் என்கிற நிலை உள்ளது. ஒன்று சீமானுடன் கூட்டணி சேர்ந்து நிற்பது. இரண்டு தனித்து நிற்பது. இதில் சீமானுடன் கூட்டணி சேர்ந்து நிற்பதில் தவெகவிற்கு உள்ள சிக்கலை பற்றி நாம் பார்க்கும் முன் NDA கூட்டணி சீமானை தன்னுடைய கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அது ஒருவேளை நிறைவேறினால் தவெக முற்றிலும் தனித்து விடப்படும் என்பது ஒரு பக்கம் உள்ள நிலை. ஒருவேளை சீமான் NDA கூட்டணி பக்கம் செல்லவில்லை, சீமானும் விஜய்யும் கை கோர்க்கிறார்கள் என்றால் என்ன ஆகும் என்பதை பார்ப்போம். யார் தலைமையில் கூட்டணி என்பதில் முதலில் பிரச்சனைகள் உருவாகும். சீமான் நீண்ட அனுபவம் உள்ள அரசியல் தலைவர்.
தனியாகவே 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட தமிழக கட்சியாக உருவெடுத்துள்ள ஒரு கட்சியின் தலைவர். அப்படிப்பட்ட சீமான் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் தலைமையை ஏற்பாரா என்பது முதல் பிரச்சனை.

சீமானை முதல்வர் வேட்பாளராக விஜய் ஏற்றுக் கொண்டால் விஜய்யின் ரசிகர்கள் அதை ஏற்பார்களா? தான் முதல்வராக ஆக வேண்டும் என்கிற நிலையில் கட்சியை தொடங்கிய விஜய், சீமானை முதல்வர் ஆக்க தவெகவை பயன்படுத்தினால் அதை விஜய் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறியே.
விஜய்யை முதல்வராக அறிவித்து நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டால் அது சீமானுக்கு கௌரவமாக இருக்குமா என்பதும் நாதக உள்ள பிரச்சனை. முதல்வர் வேட்பாளர் பற்றி எல்லாம் தற்போது பேச வேண்டாம் திமுக கூட்டணியை வீழ்த்துவது ஒன்றே நோக்கம் என்று இருவரும் இணைந்து நிற்பது நடைமுறைக்கு ஒத்து வருமா என பார்க்க வேண்டியது உள்ளது.

அவ்வாறு இருவரும் இணைந்து நின்றால் தமிழகத்தில் கணிசமான வாக்குகளை இந்த கூட்டணி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் மேற்கூறிய முதல்வர் வேட்பாளர் யார் என்கின்ற பிரச்சனையில் இந்த கூட்டணிக்குள் ஒரு ஒற்றுமையின்மை இழையோடும் என்பதையும் மறுக்க முடியாது.
தேர்தலை இரண்டு கட்சிகளும் இணைந்து சந்தித்தாலும் 234 தொகுதிகளில் இரண்டு பெரிய கூட்டணிகளை எதிர்த்து அரசியல் செய்வது, தேர்தலுக்கான செலவினங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருவரும் எதிர்கொள்ள நேரிடும். ஒரு வேலை சீமான் கூட்டணிக்கு ஒத்து வரவில்லை என்றாலும் தவெக தனித்து விடப்படும். நான்கு முனை போட்டி உருவாகும்.

தவெக தனித்துவிடப்பட்டால் என்ன நிலை உருவாகும் என்பது குறித்து பார்ப்போம். தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணி பலமாக இருக்கும் பொழுது, அதிமுக தலைமையில் NDA கூட்டணி உருவான நிலையில் சீமான் தவெகவுடன் இணையாமல் தனித்து நிற்கும் முடிவெடுத்தால் அல்லது NDA கூட்டணிக்குள் இணைந்தால் தவெக தனித்து விடப்படும் அவ்வாறு தனித்துவிடப்பட்டால் என்ன நடக்கும்?

தவெக உருவானதுமுதல், அக்டோபர் 27 விக்கிரவாண்டி மாநாடு வரை தவெகவிற்குள் அணிகளை அமைக்கும் பணி நடந்து வந்தது. ஆனாலும் பெரிய அளவில் கட்சி அமைப்பு ரீதியான முன்னேற்றங்கள் எதுவும் இல்லை என்ற குறைபாடுகள் இருந்து வந்தது. அக்டோபர் 27 மாநாட்டில் விஜய்யின் ஆக்ரோஷமான பேச்சு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வைத்திருந்தது.
தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இது எல்லாம் நடைமுறைக்கு உதவாது என்பதே உண்மை. கட்சியின் அமைப்பு ரீதியான பலமே கட்சியை அரசியல் களத்தில் நிற்க வைக்கும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

அந்த வகையில் கட்சியின் கிளை முதல் மேல் மட்டம் வரை நிர்வாகிகள் நியமனம், அரசியல் ரீதியான போராட்டம் இல்லை, உட்கட்சியில் ஆரம்பமே தனி நபர்கள் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தவெக சந்தித்து வந்தது. கட்சி தலைமை என்பது விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்தை சுற்றியே இருந்தது என்று சொல்லலாம்.
மற்ற யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. தவெகவில் கட்சி அணிகளை அமைப்பதில் பெரும் சுணக்கம் காணப்படுகிறது என்ற விமர்சனம் தொடர்ந்து வருகிறது. கட்சி புஸ்ஸி ஆனந்த் மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியை சுற்றியே இருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.

விஜய் படப்பிடிப்பில் மும்முரமாக இருப்பதால் கட்சியை கட்டமைக்கும் பணியை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் ஒப்படைத்துள்ளார். அவர் தன்னைச் சுற்றி மட்டுமே கட்சி இருக்க வேண்டும், வேறு யாரும் இயங்கக்கூடாது என்கிற முடிவில் மும்மூரமாக இருப்பது பல்வேறு பிரச்சனைகளில் வெளிப்பட்டுள்ளது.
தன்னைத் தவிர மற்ற நிர்வாகிகள் பொதுவெளியிலோ அல்லது கட்சி நிர்வாகிகளிடமோ சென்று விடக்கூடாது என்பதில் புஸ்ஸி ஆனந்த் மும்மூரமாக இருப்பது அவரது இயலாமை மட்டும் அல்ல கட்சியின் இயலாமையும் வெளிப்படுத்துகிறது.

இந்த நிலையில் கட்சிக்கு வியூக வகுப்பாளராக வந்த ஜான் ஆரோக்கியசாமி ஒரு தோல்வியடைந்த வியூக வகுப்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏதோ ஒரு வகையில் யாரையோ பிடித்து விஜய் இடம் நெருங்கி விட்ட ஜான் ஆரோக்கியசாமி தான் வியூகம் அமைத்து கட்சியை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் அடுத்த கட்ட நகர்வுக்குமான பணிகளை செய்யாமல், கட்சியை நிர்வாகி போல் உள்விவகாரங்களில் தலையிடுவதும், விஜய்யிடம் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி கட்சி நிர்வாகிகளாக நியமிக்கப்படுபவர்கள் குறித்த தனது அதிகாரத்தை செலுத்துவதும், பிற கட்சிகளில் இருந்து தவெகவிற்குள் ஆர்வத்துடன் வருவதற்கு முயற்சி எடுக்கும் யாரையும் கட்சிக்குள் விடாமல் தடுத்து நிறுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இது ஜான் ஆரோக்கிய சாமியின் தவறாக நாம் பார்க்க முடியாது. காரணம் ஒரு வியூக வகுப்பாளர் எந்த பணியை செய்ய வேண்டும், அவருடைய லிமிட் என்ன என்பது பற்றி தவெக தலைமை தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் விஜய் ஜான் ஆரோக்கிய சாமியை ஏதோ கட்சியில் பொதுச் செயலாளர், தலைமை கழக நிர்வாகி என்பது போல் அவருடைய எண்ணத்தின்படி கட்சியை நடத்த அனுமதிப்பதும், அவரை முடிவெடுக்கும் சக்தியாக மாற்றி வைத்திருப்பதும் தவெகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தவெகவிற்குள் உள்ள மற்றொரு குற்றச்சாட்டு கட்சிப் பதவிகளுக்கு பணம் வாங்குவது என்பது. தகுதியில்லாத நபர்களை கட்சிப் தலைமையில் கட்சி நிர்வாகிகளாக நியமிப்பது ஒரு குற்றச்சாட்டாக உள்ளது.

பொதுவாக அனைத்து கட்சிகளிலும் இவ்வகையான குற்றச்சாட்டுகள் எழுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் ஊழலுக்கு எதிராக ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வருகின்ற ஒரு இளைஞர் ஆரம்பித்துள்ள கட்சியில், ஆரம்பிக்கும் போதே நிர்வாகிகள் நியமனத்தில் பண ஆதாயம் உள்ளது, தனக்கு வேண்டியவர்கள் நியமிக்கப்படுகிறார்கள், பாரபட்சம் காட்டப்படுகிறது என்கின்ற குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. இது அனுமதிக்கப்பட்டால் நாளை கட்சியையே பாதிக்கும் நிலை உருவாகலாம். கட்சியின் முன்னேற்றத்தையும் அது தடுக்கலாம் என்பதை விஜய் கவனிக்க மறுக்கிறார் என்பதே உண்மையாகும்.

அதேபோன்று ஒரு கட்சிக்குள் ஒரு நபர் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதித்தால், அவருடைய எண்ணம் மட்டுமே கட்சியின் எண்ணமாக மாற வேண்டிய சூழல் ஏற்படலாம். இது வளர்ந்து வரும் ஒரு கட்சிக்கு விஜய் எதிர்பார்ப்பது போல், விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் ஆட்சியைப் பிடிக்கின்ற ஒரு கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.
புஸ்ஸி ஆனந்த் என்பவர் இதற்கு முன் காங்கிரஸ் கட்சியில் பாண்டிச்சேரியில் எம்எல்ஏவாக இருந்தவர் என்கிற தகுதியை தாண்டி அவர் பொதுச் செயலாளராக இருப்பதற்கான எந்தவித பொதுத் தகுதியும் அவரிடம் இல்லை என்பது அவரது ஒன்றரை ஆண்டுகால நடவடிக்கையில் குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.

பொதுச்செயலாளராக மற்ற கட்சிகளில் இருப்பவர்கள் அல்லது ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதிலும், செய்தியாளர்களை நேரடியாக சந்திப்பதிலும், அரசியல் நிலவரத்தை அறிந்து வைத்து தனது கட்சியின் நிலைப்பாடு அதில் என்ன என்பதை பொதுமக்களிடம், பத்திரிகையாளிடம் கொண்டு செல்வதிலும் திறமை வாய்ந்தராக இருப்பார்கள். அதேபோன்று விஜய், புஸ்ஸி ஆனந்தை நம்பி பொறுப்பை ஒப்படைத்து ஒன்றரை ஆண்டுகளை நோக்கி தவெக செல்லும் நிலையில் இதுவரை அவர் தனக்கான பொறுப்பை நிறைவேற்றினாரா? என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் கூட 25 மாவட்ட செயலாளர்கள் நியமனம் இன்னும் பாக்கியாக தொக்கி நிற்கிறது. இது தவிர கட்சி அணியின் பல்வேறு பொறுப்புகள் ஆயிரக்கணக்கான பதவிகளுக்கான நியமனங்கள் இதுவரை நியமிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களில் உள்ள நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் தமிழகம் முழுவதும் கட்சி அணிகளை முடுக்கிவிட்டு கொண்டு செல்வதில் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறார் என்று மட்டுமே கூற முடியும்.

புஸ்ஸி ஆனந்த் ஒன்றுமே செய்யவில்லையா என்று கேட்டால் மாநாடுகள், கூட்டங்கள் ஒன்று இரண்டு நடத்துவது மட்டும் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்பது தான் பொதுவான அனைவரின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் தவெக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்கிற முடிவை சொல்லாமலும், கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை சொல்லாமலும், இருந்த நிலையில் அதிமுக NDA கூட்டணி நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டது. தற்போது தவெக தனித்து போட்டியா அல்லது நாம் தமிழர் கூட்டணியா அல்லது என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது பற்றி கட்சியினர் யாருக்கும் தெரியாது.

கட்சியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவிர அடுத்த கட்ட நிர்வாகிகள் என்று யாரும் இல்லை என்கிற நிலையில், பொதுக்குழு கூட்டம் நாளை நடக்க உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் கட்சி நிலைபாடு என்ன தேர்தல் கூட்டணி குறித்த கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது? என்பது குறித்து தகவல்கள் ஏதாவது வருமா? என்பது குறித்து கட்சி தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தவெக ஒருவேளை தனித்துப் போட்டியிட்டால் இன்று உள்ள நிலையில் அதன் கட்சி கட்டுமானம், அனுபவமற்ற மாவட்ட செயலாளர்கள், அனுபவமற்ற வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்தித்தால் மிகப்பெரும் பின்னடவை தவெக சந்திக்க நேரிடும் என தெரிகிறது.

காரணம் தேர்தல் அரசியல் என்பது மிகுந்த பயிற்சியுடன் இயங்கக்கூடிய ஒன்றாகும். காவல்துறையை, அதிகாரிகளை, தேர்தல் நடைமுறைகள், மனுவை தள்ளுபடி ஆகாமல் கொண்டு செல்வது, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வியூகம் அமைப்பது, பிரச்சாரத்தை கொண்டு செல்ல தலைவர்களை நியமிப்பது, தமிழகம் முழுவதும் சூறாவளியாக இயங்கி கட்சியை கொண்டு செல்வது, தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் கட்சியின் முன் உள்ளது.
சாதாரணமான காலகட்டத்திலேயே பெரிய அளவில் இயங்காத தவெக தேர்தல் திருவிழாவில், மிகப்பெரிய பரபரப்பான காலகட்டத்தில் எப்படி இயங்கப் போகிறார்கள் என்பது தான் கேள்வி குறி. லட்சக்கணக்கான போர்வீரர்கள் இருந்தாலும், படைத்தளபதிகள் இல்லாத படை தடுமாறித்தான் போகும் என்பதற்கு தவெக ஒரு உதாரணமாக இருக்கப்போகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட தவெக அதை சுற்றியே தமிழக அரசியல் களம் இயங்கி வந்த நிலையில், தனக்கான வாய்ப்பை புறந்தள்ளி ஒதுக்கிவிட்டு, கட்சியின் தலைவர் படப்பிடிப்பிலும், பொதுச் செயலாளர் தேவையற்ற சிறு சிறு சம்பவங்களிலும் ஈடுபட்டு மிகப்பெரிய வாய்ப்பை புறந்தள்ளிவிட்டதால் இன்று தனித்துவிடப்பட்ட நிலையில் தவெக இருக்கிறது என்பதே எதார்த்தமான உண்மை.

தனித்து விடப்பட்ட தவெக 2026 தேர்தலில் என்ன செய்யப் போகிறது? சீமான் தலைமையை ஏற்று நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போகிறதா? அல்லது தனித்து களத்தில் நிற்க போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எது எப்படி இருந்தாலும் தீர்மானகரமான சக்தியாக அதிமுகவே எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தவெக தலைமையின் அலட்சியத்தால் இன்று தனித்து விடப்பட்டுள்ளது தவெக.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு பறந்த வாழ்த்து... என்ன சொன்னார் விஜய்!!