நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். இதுதொடர்பாக மார்ச் 5இல் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் ஸ்டாலின் கூட்டினார். அடுத்த கட்டமாக சென்னையில் மார்ச் 22இல் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஷா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், அந்த மாநிலங்களில் உள்ள பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக மாநில முதல்வர்களை திமுக பிரதிநிதிகள் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், " தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடங்கப்பட வேண்டும். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏதாவது எதிர்ப்பு இருந்தால், அவர் தாராளமாக இந்த பிரச்சினையை எழுப்பலாம். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளிப்பார்கள். அதே நேரத்தில் இந்த விஷயத்தில் நீதித்துறை இறுதி முடிவை எடுக்கும்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை.. முதல்வர் ஸ்டாலினுக்கு பெருகும் ஆதரவு.. கிரீன் சிக்னல் கொடுத்த நவீன் பட்நாயக்!

தொகுதி மறுவரையறை நடவடிக்கையின் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்களிலும் அதிகரிக்கும். தொகுதி மறுவரையறையால் வடமாநிலங்கள் மட்டுமே பயன் அடையும் என கூறுவது நியாயம் அல்ல" என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் செய்வது கொஞ்சமும் சரியல்ல.. கடுகடுத்த மத்திய அமைச்சர் ஜோஷி..!