பணம், மது, பரிசுக்காக ஓட்டுகளை விற்பவர்கள் மறுபிறவியில் நாய், ஒட்டகம், பூனை, ஆடுகளாகப் பிறப்பார்கள் என்று மத்தியப் பிரதேச பாஜக எம்எல்ஏ உஷா தாக்கூர் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள மஹோவ் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஹசல்பூர் கிராமத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ உஷா தாக்கூர் பேசிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது:

பாஜக ஆட்சியில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் மூலம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பலன்களை அனுபவிக்கிறார்கள் குறிப்பாக கிசான் சம்மான் நிதி, பெஹ்னா யோஜனா திட்டம் ஆகியவற்றில் ஏராளமானோர் பயன் பெறுகிறார்கள்.
இதையும் படிங்க: அடேங்கப்பா... ரூ.3,400 கோடி டூ வெறும் ரூ.1,700: பணக்கார- ஏழை எம்.எல்.ஏக்களின் சொத்து வித்தியாசம்
ஆனால், இதைவிடுத்து ரூ.500 முதல் ரூ.1000க்கு உங்களின் மதிப்பு மிகுந்த வாக்குகளை விற்பனை வெட்கக்கேடானது. மக்கள் ஜனநாயகக் கடமையாற்றும்போது ஜனநாயகத்தை காக்க வேண்டும். நீங்கள் எப்படி வாக்களிக்கீர்கள், நேர்மையாக செயல்படுகிறீர்களா, பணம்வாங்கி வாக்களிக்கிறீர்களா என்பது கடவுள் பார்த்து வருகிறார். வாக்களிக்கும்போது உங்கள் நேர்மையை இழக்காதீர்கள்.

பணம், புடவை, மது, பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வாக்களிப்பவர்கள் தங்கள் டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், மறுபிறவியில் நீங்கள், நாய், பூனை, ஆடு, ஒட்டகமாகப் பிறப்பீர்கள். ஜனநாயகத்தை விற்பனை செய்வோர், இப்படித்தான் சபிக்கப்பட்டு பிறப்பார்கள் இதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். நான் கடவுளிடம் நேரடியாக பேசும் சக்தி இருக்கிறது, என்னை நம்புங்கள்” எனத் தெரிவித்தார்.
இந்த கருத்துக் குறித்து உஷா தாக்கூரிடம் நிருபர்கள் கேட்டபோது, “நேர்மையாக வாக்களிப்பது, ஜனநாயகத்தை காப்பது குறித்து கிராம மக்களுக்கு அவர்களுக்கு புரியும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தேன். ஜனநாயகம் நமது வாழ்க்கை. அரசியலமைப்புச் சட்டப்படி மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. ஆண்டின் 12 மாதங்களிலும் அரசு மக்களுக்கு சேவையாற்றுகிறது. ஆனால் ஒருவர் வாக்கை பணத்துக்காக விற்றால், அது பொறுக்கமுடியாத குற்றம்” எனத் தெரிவித்தார்.

உஷா தாக்கூர் இதே போன்று முன்பு பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில் “மக்கள் அனைவருக்கும் பாஜகவுக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும். அந்த கட்சி மட்டும்தான் மக்களுக்கு சேவையாற்றுகிறது, மதத்தை, கலாச்சாரத்தை பாதுகாக்கிறது” எனப் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் ஐபோன், பைக் கொள்ளை.. பீர் பாட்டிலால் குத்தி கொலை மிரட்டல்.. அடங்காத ரவுடிகளுக்கு மாவுக்கட்டு..!