தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படைவீடாக திகழ்வது திருப்பரங்குன்றம். தெய்வானையை முருகர் இங்குதான் கரம்பிடித்தார் என்பது ஐதீகம். 7-ம் நூற்றாண்டில் பாண்டியர்களின் காலத்து கல்வெட்டு ஒன்றும் அதன்பிறகு நாயக்க மன்னர்கள் என பல்வேறு தரப்பினர் இக்கோவிலுக்கு பங்களித்துள்ளனர் என்பதில் இருந்தே இதன் பழைமையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மலையின் வடமேற்கு பகுதியில் சமணர் கற்படுகைகள் உள்ளன. தென்கிழக்குப் பகுதியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா எனும் பள்ளிவாசல் அமைந்துள்ளது.

காலம் காலமாக சுப்ரமணியை சுவாமியை இந்துக்கள் வழிபடும் அதேவேளையில் மலையின் பின்புற பாதை வழியாக இஸ்லாமியர்கள் மலையேறிச் சென்று சிக்கந்தர் தர்காவில் தொழுகை நடத்துவார்கள். அண்ணன் தம்பிகளாகத் தான் இருவரும் தத்தமது கடவுளை வணங்கி வந்தனர். ஆனால் கடந்த சிலநாட்களாக திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், தொழுகை செய்யக் கூடாது என நிர்பந்திக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. திருப்பரங்குன்றம் வருவாய் கோட்டாட்சியர் வாய்மொழி உத்தரவாக இதனை பிறப்பித்ததாக கூறப்பட்டது.

இதனைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஜமாத் அமைப்பினரைச் சேர்ந்த ஏராளமானோர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வருவாய் கோட்டாட்சியரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காவல்துறை அனுமதி மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் தொடங்கிய இந்த ஆண்டின் முதலாவது ஜல்லிக்கட்டு.. தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த காளைகள், அடக்கப் பாய்ந்த காளையர்...
இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக கணக்கான, தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்றும் வருவாய் கோட்டாட்சியர் அதற்கான ஆணை பிறப்பித்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறான செய்தி என்றும் கூறப்பட்டுள்ளது. மலைமீது பள்ளிவாசல் அருகே ஆடுகளை பலியிடுவதற்கு மட்டும் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம்காலமாக ஒருபக்க முருக வழிபாடும், மறுபக்கம் தர்காவில் தொழுகையும் நடைபெற்று வந்த நிலையில் யாரோ ஒருசிலர் இதனை அரசியலாக்க முயல்வதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றனர். கருப்பண்ண சாமி கோயிலில் எப்படி ஆடு,கோழிகளை பலிகொடுப்பது இயல்பானதோ, அதுபோலத் தான் சுல்தான் சிக்கந்தர் தர்காவிலும் ஆடுகளை பலிகொடுப்பது தொன்றுதொட்டு நடப்பதாக அங்குள்ள இஸ்லாமியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்து பண்டிகை நாட்களில் அவ்வாறு பலியிடுதல் வேண்டாம் என அங்குள்ள ஒருசில இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக முறையிட்டு வருகின்றனர்.
இறைவனின் பாதையை அடைய ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொரு பாதையை காட்டுகின்றன. ஆனால் இறுதியில் சென்று சேரும் இடம் இறைவனிடம் தான். இதனை புரிந்து கொண்டு ஆன்மிகத்தை நம்பும் இருதரப்பினரும் அமைதியாக கலைந்து செல்லும்பட்சத்தில் இதில் குளிர்காயலாம் என தீமூட்டுபவர்கள் அதிலேயே பொசுங்கி போய் விடுவார்கள் என்பது தான் உண்மை.
இதையும் படிங்க: மதுரையில் பாஜக மகளிர் அணியினரை செம்மறி ஆடுகளுடன் ஒன்றாய் அடைத்து வைத்த காவல்துறை… போலீஸாருடன் வாக்குவாதம்