அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கங்களையும், அவர்களை நோக்கி பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார். அவர் பேசிய விவரம் வருமாறு,
பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் நின்று நீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க ஆணித்தரமாக அரசு செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். குற்றச்செயல் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அதனை மீறி எதிர்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்துடன் பேசி வருவதாகவும் முதலமைச்சர் வருத்தம் தெரிவித்தார். குற்றவாளியை கைது செய்வதில் பாரபட்சம் காட்டி இருந்தால் குறைகூறலாம், கைது நடவடிக்கைக்குப் பிறகு ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தார்.

முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலே என்பதையும் அவர் எடுத்துரைத்தார். யார் அந்த சார்? என கேள்வி எழுப்புகிறீர்களே, உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புக் குழு தான் புலன் விசாரணை செய்து வருவதால், அவர்கள் அந்த சார் யார் என்பதை கண்டுபிடித்தால் தயவு தாட்சண்யமின்றி 100 சதவிதம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் உறுதிபடுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பெண்ணுக்கு எதிர்காலம் இருக்கு .. மனிதாபிமானம் இல்லையா உங்களுக்கு..? எதிர்க்கட்சிகளை துளைத்த அமைச்சர் சேகர்பாபு...
யார் அந்த சார்? என கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகளே அதற்கான ஆதாரம் இருந்தால் புலன் விசாரணை குழுவிடம் சமர்ப்பியுங்கள், அதைவிடுத்து குறுகிய அரசியல் லாபத்திற்காக மலிவான விளம்பரங்களில் ஈடுபட வேண்டாம் என எதிர்கட்சிகளிடம் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் கூறினார். பெண்களுக்கு எதிரான அரசு என்ற கருத்தை விதைக்க சதி செய்யப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ரயில் முன்தள்ளி சத்யா என்ற இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில், உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை பெற்றுத் தந்தது திமுக அரசு என விளக்கம் அளித்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பான நகராக சென்னை, கோவை இருப்பதை மத்திய அரசின் புள்ளி விவரங்கள் காட்டுவதாக முதலமைச்சர் எடுத்துரைத்தார். அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு எதிரான செயலை யார் செய்தாலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என முதலமைச்சர் உறுதிபட கூறினார். பொள்ளாச்சி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காதவர்கள் தான் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு வந்துள்ளதாக அவர் விமர்சித்தார். பொள்ளாச்சி விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய 12 நாட்கள் ஆனதாகவும், அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் 2 நாட்களில் எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஒப்பீடு செய்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து வலியுறுத்தினார். ஒருகட்டத்தில் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார், பாமக உறுப்பினர் ஜி.கே.மணி ஆகியோர் ஒருசில கேள்விகளை முன்வைத்தனர். ஜனநாயக ரீதியில் போராட அனுமதி மறுக்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். தனது உரையின் போது எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், யாராக இருந்தாலும் அனுமதி பெற்றே போராட்டம் நடத்த வேண்டும் என அவர் விளக்கம் அளித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றதையும், அவர்களில் அனுமதி பெறாமல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டதையும் முதலமைச்சர் நினைவுகூர்ந்தார். போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்குவதில் போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பெண்களுக்காக போராடக்கூட உரிமையில்லையா..போலீசுடன் மல்லுக்கட்டிய தவெக பெண் நிர்வாகிகள்