விசிக-வில் இருந்துகொண்டு ‘ஆட்சி - அதிகாரத்தில் பங்கு’ என ஒரு பிரளயத்தை உருவாக்கியவர் ஆதவ் அர்ஜுனா. இடைநீக்கம் செய்யப்பட்ட அவர் விலகுவதாக அறிவித்து விட்டார். ஆனால், அவரது விலகல் விசிகவில் உள்ள பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வி.சி.க உணர்வாளர்கள் ஆதவ் அர்ஜூனாவுக்கு ஆதரவு தருகிறார்கள்.
இந்நிலையில், ‘‘விசிக-வுக்கு 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்டும்’’ என விசிக துணை பொதுச் செயலர் வன்னி அரசு தெரிவித்துள்ளது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
வன்னியரசு கூறுகையில், ‘‘1999-ல் விசிக தேர்தல் பாதைக்கு வந்தபோதே ‘எளிய மக்களுக்கும் அதிகாரம், கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்’எனச் சொன்னார் திருமாவளவன். இதுதான் 2016-ல் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் கோட்பாடாக மாறியது. இதைத்தான் ஆதவ் அர்ஜுனாவும் பேசினார். இதைத்தான், “ஆதவ்வின் இந்த கருத்து தவறான கருத்து இல்லை. கட்சியின் நிலைப்பாடு தான்” என்று தலைவரும் சொன்னார். அந்த நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்.
இதையும் படிங்க: 2026ல் -கனவு காணும் எடப்பாடியார்..! கருகும் இலை... கூட்டணிக்கு என்ன விலை..?
‘இதையெல்லாம் பேசவேண்டாம்’ என தலைவர் சொன்னதை மீறி புத்தக வெளியீட்டில் ஆதவ் அர்ஜூனா பேசினார். அப்படி கட்டுப்பாட்டை மீறியதால் தான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பொதுவாக கட்சியிலிருந்து இப்படி இடைநீக்கம் செய்யப்படுபவர்கள் அதுகுறித்து விளக்கமளிப்பார்கள். அதை உயர்மட்டக்குழு பரிசீலித்து மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பை ஆதவ் அர்ஜுனா உருவாக்கவில்லை. விலகுவதாக அறிவித்து விட்டார். அவர் விலகியது வருத்தமளிக்கக்கூடியதுதான்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி, 2 எம்பி-க்கள், 4 எம்எல்ஏ-க்கள் என அரசியலின் உச்சத்தில் இருக்கிறது விசிக. விசிக-வின் இந்தப் பயணம் சாதாரணமானது அல்ல. குருதியாற்றை கடந்து பயணித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். இப்போது நாங்கள் வலிமைமிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகியிருக்கிறோம்.
இப்போது தமிழகத்தின் திசைவழியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு விசிக-வை கூட்டணியில் சேர்த்தால், தலித் அல்லாதவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற எண்ணவோட்டம் இருந்தது.
அதனை மாற்றி இப்போது விசிக இருக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்ற சூழலை உருவாக்கியுள்ளோம். 2026-ல் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என திருமாவளவன் கூறியுள்ளார். என்னைப்போன்ற கடைநிலை தொண்டர்களின் மனநிலை என்னவென்றால், 2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்
.
விசிக-வில் உள்ள அனைவரின் விருப்பமுமே எங்கள் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான். எதார்த்த சுழலில் ஒரு தலித் முதல்வராக முடியாது என எங்கள் தலைவர் சொல்கிறார். ஆனால், இன்று அவரை தலித் தலைவராக பார்க்காமல், பொதுத்தலைவராக மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். எனவே, அவருக்கான உயரத்தை அடையவைக்க நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது, அதற்காக உழைக்க ஆரம்பித்துவிட்டோம்.
இந்திய அளவில் மாநில உரிமைகள், மக்கள் உரிமை, திட்டங்கள் என எல்லாவற்றிலும் ரோல்மாடலாக உள்ளது திமுக ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் போன்ற பல முன்னோடி திட்டங்களை இந்த ஆட்சி நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஒரு மாநில கட்சியாக மக்களை பாதுகாக்க ஒன்றிய அரசோடு உரிமையோடு சண்டையிட்டு மாநில உரிமைகள், நிதிபங்கீட்டை போராடிப் பெறுவதில் சரியாக செயல்பட்டு க்கொண்டிருக்கிறது. அதேசமயம் மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறியுள்ளதா என்றால் அது இல்லை. வரும் காலத்தில் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை'' எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்குள் இருந்து கொண்டே திமுக ஆட்சியை விமர்சிப்பதும், அதிக தொகுதிகளை பெற வேண்டும் என வன்னியரசு பேசியிருப்பதை திமுக உற்று நோக்கி வருகிறது. முதலில் ஆதவ் அர்ஜூனாவை பேசவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். இப்போது அக்கட்சியின் முக்கிய நிர்வாகி வன்னியரசுப் அதையே பேசுகிறார். திருமாவளவனுக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கிறது? என திமுகவினர் நகத்தைக் கடிக்கின்றனர்.
இதையும் படிங்க: முனிவரே, எடப்பாடியாருக்கு புத்தி சொல்லு... சக்தி வேண்டி அலையும் ஓபிஎஸ்..!