NCW தேசிய மகளிர் ஆணையம் நீதித்துறை போல் வலுவான அதிகாரம் கொண்ட அமைப்பு. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாமாக முன் வந்து அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் உண்மை கண்டறியும் குழு உறுப்பினர் மமதா குமாரி மற்றும் மஹாராஷ்டிரா முன்னாள் டிஜிபி பிரவீன் தீட்சித் ஆகியோரை விசாரணைக்காக சென்னைக்கு அனுப்பியது.
இந்த விஜயத்தின் போது, உண்மை கண்டறியும் குழுவானது முழுமையாக நடந்த நிகழ்ச்சி குறித்து விசாரணை நட்த்தவும், நடந்துகொண்டிருக்கும் விசாரணையை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்கள், மாணவர், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, தொடர்ச்சியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் பணியிலும் இறங்கியது.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் தனது விசாரணையை எப்படி நடத்தியது, யார் யாரை சந்தித்தது என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த விவரம் வருமாறு:
இதையும் படிங்க: வந்த உடனேயே கைதா? ஆர்ப்பாட்டம் நடத்த விடுங்கப்பா? போலீஸாரிடம் கொந்தளித்த சீமான்
* உண்மைக்கண்டறியும் குழு, முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது உறவினர்களை சந்தித்து, சம்பவத்தின் விவரங்களை கேட்டறிந்து தேவையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தது.
* சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டது.
* இது தொடர்பாக தமிழக ஆளுநருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
* உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
* விசாரணையில் ஈடுபட்டுள்ள மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவையும் (SIT) குழு சந்தித்து விசாரணை குறித்து விவாதித்தது.
* அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்போது துணைவேந்தர் இல்லாததால், பல்கலைக் கழகத்தின் முக்கியக் குழுவின் உறுப்பினர் செயலாளரான மூத்த அதிகாரியுடன் குழு விசாரணை நடத்தியது.
* விசாரணையின் தற்போதைய முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக முதலில் விசாரித்த விசாரணை அதிகாரி மற்றும் உதவி ஆணையருடன் குழு விசாரணை நடத்தியது.
* NGO வின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் அவர்களின் தரப்பு கருத்துக்களை புரிந்து கொள்ளவும், அவர்களது ஆதங்கத்தை பதிவு செய்யவும் கூட்டம் நடத்தப்பட்டது.
* கூடுதலாக, உண்மை கண்டறியும் குழு பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் சம்பவம் நடந்த இடம் அதற்கான சூழ்நிலை, பாதுகாப்பு குறைபாடுகளை அடையாளம் காண பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தது.

* பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதை உறுதி செய்வதற்கும் கல்வி நிறுவனங்களுக்குள் பாதுகாப்பான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் NCW உறுதியாக உள்ளது.
அரசு, ஆளுநர், காவல் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் பரிந்துரைகளுடன் கூடிய விரிவான அறிக்கை தொகுக்கப்பட்டு விரைவில் தேசிய மகளிர் ஆணைய தலைவரிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு NCW -ன் உண்மை கண்டறியும் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடைய உண்மை கண்டறியும் குழு விசாரணை அறிக்கை தயாரான நிலையில் அந்த அறிக்கையை டெல்லியில் பிரதமரிடம் அளிப்போம் என்று மகளிர் ஆணைய தலைவி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரம் தேசிய முக்கியத்துவம் பெறுகிறது என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது?' பெண்களுக்கு கைப்பட கடிதம் எழுதிய விஜய்