இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டுள்ள அவர், இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி என்றும் தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி, தன்னிலிருந்து திராவிடக் குடும்பத்து மொழிகளைக் கிளைத்திடச் செய்த தாய்மொழி எனவும் கூறியுள்ளார்.
தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது என உறுதிப்பட தெரிவித்துள்ள முதலமைச்சர்,தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டைச் சிதைக்கும் நோக்கத்துடன் பன்னெடுங்காலமாக இனப் பகைவர்கள் நடத்திய படையெடுப்பை இந்த மண் தொடர்ந்து முறியடித்து வந்திருக்கிறது, இந்த நெடிய மரபின் தொடர்ச்சிதான் திராவிட இயக்கம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்ட செம்மொழி என்பதும் இந்தியாவின் பிற மொழிகள் போல வடமொழி ஆதிக்கத்தால் சிதைவுறாமல் என்றும் நிலைத்திருக்கும் மொழி என்பதும் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்பவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது என சாடியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வரின் தேர்தல் வாக்குறுதி! கோவை கிரிக்கெட் மைதானத்திற்கு கிடைத்த தடையில்லாச் சான்று!!!
ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய்மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை, இந்தி பரவிய நிலப்பரப்பெங்கும் காண முடியும் என பதிவிட்டுள்ளார்.

பிரஜ்பாஷா, புந்தேல்கண்டி, போஜ்புரி, அவ்தி, கண்ணோஜி, கர்வாலி மற்றும் குமோனி என மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது என்றும் ஹரியாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, சந்தாலி, சத்தீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரைத் தேட வேண்டியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், தொடர்ச்சியான போராட்டத்தினாலும் நம் தாய்த் தமிழ்மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதால்
இதனைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சியை மேற்கொள்கிறது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு... மு.க.ஸ்டாலின் கருத்துக்கு BRS கட்சித் தலைவர் ஆதரவு..!