காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அவர் பேசியதாவது:
நரேந்திர மோடிஜி 100 கோடி இந்தியர்களிடம் செலவு செய்வதற்கு கூடுதல் வருமானம் ஏதுமில்லை. நம்முடைய ஜிடிபியில் 60% நுகர்வைச் சார்ந்துள்ளது. நாட்டில் உள்ள 10 சதவீதம்பேரால்தான் பொருளாதார இயக்கம் நடக்கிறது, 90% பேர் அடிப்படை அன்றாடத் தேவைகளை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். பிரதமர் மோடியின் விக்சித் பாரத் திட்டத்தின் நோக்கம் சாமானிய இந்தியர்களின் சட்டைப் பாக்கெட்டை காலி செய்து, கோடீஸ்வரர்களின் கஜானாக்களை நிறைத்துவருகிறது. இந்தியா உலகளாவிய வரிப்போரிலும், வரித்தடைகளிலும் சிக்கியுள்ளது. மத்திய பட்ஜெட்டின் அறிவிப்புகள் பிசுபிசுத்துப்போனது எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அஜெய் குமார் கூறுகையில் “ நாட்டில் உள்ள முதலீட்டாளர்களின் ரூ.80லட்சம் கோடி முதலீடு பங்குச்சந்தையில் இருந்து காலியாகியுள்ளது. அமெரிக்கா பரஸ்பர வரித் திட்டத்தை செயல்படுத்தினால் இந்தியாவின் நிலையும், இந்தியப் பங்குச்சந்தைகள் நிலையும் இன்னும் மோசமாகும்.
இதையும் படிங்க: செல்வப்பெருந்தகையின் தலைவர் பதவிக்கு ஆபத்து..? காங்கிரஸில் போர்கொடி தூக்கும் 25 மாவட்ட தலைவர்கள்..!
பிரதமர் மோடி அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பை சந்தித்தபின், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கான வரியை 50% குறைத்துவிட்டார், டெஸ்லா கார்களுக்கு 85% வரியாக குறைந்துவிட்டது. இதுபோன்ற சலுகைகள், வேளாண்மை துறைக்கு கொடுப்பாரா பிரதமர்மோடி. அமெரிக்காவின் வர்த்தகப் பொருட்களையும் சீனப் பொருட்களையும் அடைத்து வைக்கும் இடமாக இந்தியா மாறிவிட்டது.

இந்தியக் குடும்பங்கள் கடனாளியாகிவிட்டன. மக்களின் உண்மையான ஊதியம் உயராமல் தேக்கமடைந்துவிட்டது, ஆனால், இந்த சிக்கல்களை உணர மத்திய அரசு மறுக்கிறது” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்த அறிக்கையில் “ சமீபத்தில் இஸ்டஸ்-வேலி ஆண்டு அறிக்கை 2025 வெளியானது.அதில் இந்தியக் குடும்பங்களின் நிதிநிலை மோசமாக இருக்கிறது. இந்தியா கொரோனா தொற்றிலிருந்து நுகர்வு வளர்ச்சியால்தான் மீண்டது. நுகர்வோர் கடன் கடந்த ஆண்டுகளில் 18சதவீதம்தான். நுகர்வுக்கு எரிபொருள் நிரப்புவதற்குப் பதிலாக கடன் வளர்ச்சி இப்போது வீடுகளில் கடன் நெருக்கடியை உருவாக்கியுள்ளது, மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீட்டுக் கடன் கிட்டத்தட்ட 43% என்ற உச்சத்தை எட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ நாட்டின் வருமானத்தில் 57.7% 10 சதவீத கோடீஸ்வரர்களிடம் இருக்கிறது, 50 சதவீத ஏழைகளின் பங்கு வெறும் 15%தான். நடுத்தர மக்களின் சேமிப்பு என்பது 50 ஆண்டுகளுக்கும் கீழாகக் குறைந்துவிட்டது. தொழிலாளர்களின் ஊதியம் கடந்த 10 ஆண்டுகளாக தேக்கமடைந்துள்ளது. பணக்காரர்கள் மட்டும்தான் மேலும் பணக்காரர்களாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மறக்க முடியாத தெய்வீக காட்சியை உருவாக்கியது மகா கும்பமேளா... பிரதமர் மோடி நெகிழ்ச்சி..!