ஏற்கெனவே இருக்கும் சட்டத்தின்படி, ஒரு எம்.பி. அல்லது எம்எல்ஏ குற்றவழக்கில் 2 ஆண்டுகளுக்கு அதிகமாக தண்டனை பெற்றால் 6 ஆண்டுகள்வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவை பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயே தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “ மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு8 மற்றும் 9 ஆகியவை செல்லத்தக்கதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் “ இந்த மனு மீது மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை மத்திய அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யத் தவறினால், இந்த வழக்கை நீதிமன்றம் முடிவு செய்யும். வழக்கின் உதவிக்கு மத்திய அரசன் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி உதவியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அதற்கு வெங்கடரமணியும் சரி எனத் தெரிவித்தார்.

இந்த மனுவின் விசாரணையின்போது நீதிபதிகள், தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட வந்திருந்த வழக்கறிஞரிடம் “ அரசியலில் குற்றமாக்கல் என்பது மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதை மனதில் வைத்து சிறந்த தீர்வை வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தனர். இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட வந்திருந்த வழக்கறிஞரும் நிச்சயமாக என பதில் அளித்தார்.
இதையும் படிங்க: குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அஸ்வினி உபாத்தாயே சார்பில் வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடுகையில் “ தண்டனை பெற்ற ஒருவர் அரசியல் கட்சியின் நிர்வாகியாகத் தொடரமுடியுமா எனக் கேட்டார். அது மட்டுமல்லாமல் இன்றைய சூழலில், எம்பி, எம்எல்ஏக்கள் கொலைக் குற்றத்தில் சிக்கியும் தேசியக் கட்சியின் தலைவராகக் கூட இருக்கிறார்கள். இந்த விஷயங்களையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் நியமிப்பதில் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம்.. பிப்.12ம் தேதி விசாரணை!