நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெம்பீம் திரைப்படம் பழங்குடி இருளர் இன மக்களின் அவலநிலைகளை வெளிப்படுத்தும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அத்திரைப்படத்தில் சமூகத்தில் விழும்பு நிலை மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை குறித்து விரிவாக எடுத்துரைத்தது. மேலும் இத்திரைப்படம் சமூகத்தில் பெரும் தாக்கத்தையும் பல்வேறு வகை விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் மீது போலியாக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்படுவது போல காட்சி படுத்தப்பட்டிருக்கும். இது மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதேபோல ஒரு சம்பவம் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பச்சனாம்பட்டி பகுதியில் நரிக்குறவ இனத்தை சேர்ந்த மக்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினராக வசித்து வருகின்றனர். இவர்களில் அருணாச்சலம், சுரேஷ் இருவரும் ஈட்டியம்பட்டி அருகே உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் வலை அமைத்து காடை, கௌதாரி பிடிக்க முற்பட்டனர். ஆனால் இவ்வலையில் கீரிப்பிள்ளை மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக வனவிலங்கை பிடித்ததாக கூறி அருணாச்சலம், சுரேஷ் இருவரையும் தீர்த்தமலை வன சரகத்திற்குட்பட்ட வனத்துறையினர் விசாரணைக்காக நேற்று முன்தினம் அழைத்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து.. தரைமட்டமான பட்டாசு ஆலை.. 3 பெண்கள் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

இருவரையும் கைது செய்து 2 நாட்கள் ஆகிய நிலையில், இதுவரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரையும் உறவினர்கள் பார்க்க வனத்துறையினர் அனுமதிவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரின் உயிருக்கு ஏதும் ஆபத்து இருப்பதாக அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருவரையும் கைது செய்திருந்தாலும், உறவினர்கள் நேரில் பார்க்க அனுமதி அளித்தால் போதுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் சதீஷ் இன்றும் நாளையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனை அறிந்த நரிக்குறவர் இன மக்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களை விடுவிக்க வலியுறுத்தி திரண்டனர். அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்று கூடிய அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்கு நரிக்குறவர் மக்கள் அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு காத்திருந்தனர். இந்நிலையில் கைது செய்த இரண்டு நபர்களையும் விடுவிக்கவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல் விடுத்திருந்தனர்.
இதையும் படிங்க: தர்மபுரி மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்..! கலக்கத்தில் திமுக மா.செக்கள்..!