தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால் இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஆளும் திமுக 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவது உறுதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பேசியிருந்தார். தமிழ்நாடு அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களும் ஏதேனும் ஒரு பயனாளியை போய் சேர வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.
முந்தைய அதிமுக அரசும் தனது ஒவ்வொரு திட்டங்களையும் மகளிர் மற்றும் இளைஞர்களை குறிவைத்தே கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுக அரசை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் மீண்டும் அமரப் போவது உறுதி தொடர்ந்து பேசிவருகிறது. பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் இவர்களின் வாக்குகளை இலக்காக கொண்டே செயல்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் தமிழ்நாட்டின் புதிய வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வியூகங்களும், பரப்புரைகளும் திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளதை மறுக்க முடியாது. முதலாவதாக கழகம் என்ற சொல் தமிழ்நாட்டு மக்களோடு கலந்து விட்டு ஒன்று. அதனை தன்னுடைய கட்சியின் பெயரில் சேர்த்துக் கொண்ட விஜயின் செயல்பாடு பாராட்டுக்குரிய ஒன்று. இரண்டாவது தமிழ்நாட்டில் ஏராளமான சிறு,குறு இனக்குழுக்கள், சாதிகள் இருந்தாலும் பெருவாரியாக இருப்பவை 5 பிரிவுகளே. இந்த இடத்தில் மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய கொள்கைத் தலைவர்கள் என 5 பேரை அடையாளம் காட்டி உள்ளார் நடிகர் விஜய்.
இதையும் படிங்க: சும்மா இருந்தால் சுகம் தராது இந்த அரசியல்..! புஸ்ஸியை அனுப்பி ஆழம் பார்த்த விஜய்..!

அவர் குறிப்பிட்ட அந்த 5 பேரையும் சாதிய அடையாளத்திற்குள் கொண்டு வருவது என்பது மிகவும் தவறான பார்வையாக பார்க்கப்பட்டாலும், அரசியல் நோக்கர்கள் அவ்வாறு கருதவில்லை. ஒவ்வொரு பிரிவின் வாக்குகளை குறிவைத்தே இந்த 5 பேரையும் விஜய் தேர்வு செய்துள்ளதாக கருத்து தெரிவித்தனர். இதற்கு தவெக சார்பில் எந்த மறுப்பும் இதுவரை சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக டிஜிட்டல் மயமாகி விட்ட காலகட்டத்தில் பொதுக்கூட்டம், மாநாடு போன்றவை அதிக பொருட்செலவு மிக்கதும், நடைமுறை சிக்கல் மிகுந்ததாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் தங்கள் செல்வாக்கை, மக்கள் ஆதரவை காட்டுவதற்கு மாநாட்டை விட எளிதான ஒரு செயல் இருந்துவிட முடியாது. மாபெரும் மக்கள்திரள் என்பது சமூகத்தின் கூட்டு மனசாட்சியை அசைத்துப் பார்க்கும் ஓர் கருவி. அந்தவகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் கொள்கை அறிவிப்பு மாநாட்டை நடத்திக் காட்டினார் நடிகர் விஜய். அரசியல் களத்தில் அந்த மாநாடு ஏற்படுத்திய அதிர்வு மறுக்க முடியாது ஒன்று. குறிப்பாக ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விஜயின் அழைப்பு திமுக கூட்டணி கட்சிகளை சலசலப்புக்கு உள்ளாக்கியது.
எதிர்கட்சியின் கூட்டணிக்குள் மதில்மேல் பூனையாக இருக்கும் கட்சிகளுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்து அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் அரசியல் ராஜதந்திரத்தில் கைதேர்ந்தவர் மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. கிட்டத்தட்ட அதேபாணியில் தற்போது திமுக கூட்டணிக்குள் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மறைமுக அழைப்பு விடுத்ததும் பாரம்பரிய கழகங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக திமுக மற்றும் அதிமுகவின் உட்கட்சி கட்டுமானத்தை அப்படியே தவெக-வுக்குள் கொண்டு வரும் செயல்பாட்டில் இறங்கி உள்ளார் நடிகர் விஜய். பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர், பொருளாளர், கொள்கை பரப்பு செயலாளர் என கட்சியின் மேல்மட்ட அளவிலும் மாவட்டச் செயலாளர், வட்டச் செயலாளர், நகரம் - கிளை என அடித்தட்டு வரை கொண்டு செல்லவும் விஜய் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இவ்வாறு ஒரு அமைப்பு தவெக-வுக்குள் இருந்தாலும் அதிகாரபூர்வமான பட்டியல் என எதுவும் இதுவரை வெளியிடப்பட்டதில்லை.
இந்தசூழ்நிலையில் கட்சி தொடங்கப்பட்டு முதல் ஆண்டு கொண்டாட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வரவுள்ளது. அந்த சமயத்தில் மாவட்டச் செயலாளர்களை அறிவிப்பது என நடிகர் விஜய் முடிவு எடுத்துள்ளாராம். இதற்காக கட்சி அளவில் தமிழ்நாட்டை 100 மாவட்டங்களாக பிரிப்பது என்றும் பெண்களுக்கு சமவாய்ப்பு அளித்து மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது என்றும் முடிவு செய்துள்ளாராம். பிப்ரவரி தொடங்கி அடுத்த ஓராண்டுக்கு களத்தில் இறங்கி அவர்கள் செயல்பட அப்போது தான் ஏதுவாக இருக்கும் என்து தவெக தலைமையின் வியூகமாம். ஒட்டுமொத்தமாக பார்த்தால் 2026 தேர்தல் முடிவுகள் எப்படியாக இருந்தாலும் களத்தில் சூடுபறக்கும் என்பதை மறுக்கமுடியாது.
இதையும் படிங்க: விஜயகாந்த் விசுவாசிகள் மீது பாய்ந்த புஸ்ஸி... நன்றி மறந்த விஜய்..! அன்புமணி மகளுக்கு சப்போர்ட்: தந்தையை கைவிட்டதாக ரிப்போர்ட்..!