தமிழ்த் திரையுலகின் தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பர் அஜீத். சுருக்கமாக AK. தமிழ் சினிமா சந்தித்திராத நடிகர்களுள் அஜீத் முக்கியமானவர். தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார், தல போன்ற பட்டப்பெயர்கள் வேண்டாம் என துணிச்சலுடன் கூறியவர். தான் நடித்த படங்களின் விழாக்களுக்குக் கூட செல்ல மாட்டார், பாடல் வெளியீட்டு விழா என்றால் சொல்லவே வேண்டாம், "தல"யே காட்ட மாட்டார். வேறு எங்கு பார்க்கலாம் என்றால் கார் ரேஸ் மைதானங்களில் மிக எளிதாக வளைய வருவார் அஜீத்.

திரைப்படத்துறைக்கு வந்த புதிதில் இருந்தே பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார் அஜீத். ஆசை படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் அஜீத் மோகம் பொங்கி வழிந்த காலகட்டத்தில் பைக் ரேஸில் கலந்து கொண்டு முதுகு தண்டில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்தார் அஜீத். இதன்பிறகாவது அடங்குவார் என்று பார்த்தால் சினிமாவில் நடிப்பதை விட மோட்டார் பந்தயங்களில் பங்கேற்க விரும்பினார். விளைவு 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சுமார் 10 படங்களுக்கும் மேல் அஜீத்துக்கு அட்டர் ப்ளாப்..
இதையும் படிங்க: 100 நாள் வேலை ..திட்டத்தை எதிர்க்கும் சீமான் ..வேலை கேட்டு நிற்கும் தாயார்
அதன்பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். மங்காத்தா படம் வந்த வேளையில் மீண்டும் ரேஸ் பக்கம் ஆர்வம் காட்டினார். இந்தமுறை கார் பந்தயங்கள் மீது அவரது பார்வை திரும்பியது. சமீபத்தில் அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அவர் தொடங்கினார். அந்நிறுவனம் சார்பில் துபாயில் நடைபெற உள்ள 24 மணிநேர பந்தயத்தில் பங்கேற்க போவதாக கூறி கடந்த சில வாரங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

அப்படி பயிற்சி மேற்கொண்டபோது அவர் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக அஜீத்துக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அந்நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு துபாய்24மணிநேர தொடர் கார் பந்தயத்தில் ஓட்டுநராக அஜீத் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நலன், சமீபத்திய விபத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அஜீத் கார் ரேஸிங் நிறுவனம் சார்பில் கார்கள், 24மணிநேர தொடர் பந்தயத்தில் பங்கேற்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஓட்டுநராக அல்லாமல் ஒரு உரிமையாளராக அவர் இந்த தொடரில் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.
கார் பந்தயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் அக்டோபர் முதல் மார்ச் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை என சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஜீத் கூறியிருந்தார். ஒருவேளை துபாய் பந்தயத்தில் கலந்து கொள்ளாதநிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்வாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: "அந்த சார்" கண்டிப்பாக ஒரு "அரசியல்வாதி" தான்..குண்டை தூக்கிப்போட்ட இசையமைப்பாளர் தீனா..!