தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் டோமலபென்டா அருகே ஸ்ரீசைலம் அணையில் இடது சுரங்க கால்வாய் அமைக்கு பணி நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை காலை இந்த பணியில் ஈடுபட 50 ஊழியர்கள் சென்றனர். இந்த சுரங்கத்தில் 14 வது கிலோ மீட்டரில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 50 பேரும் மண் சரிவில் சிக்கிய நிலையில், இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சுரங்கத்திற்குள் சென்று 42 தொழிலாளர்களை மீட்டனர்.

எனினும், திட்டப் பொறியாளர் மனோஜ் குமார், களப் பொறியாளர் ஸ்ரீனிவாஸ், ஜெனரேட்டர் ஆபரேட்டர் சன்னி சிங், தொழில்நுட்ப வல்லுநர் குர்பிரீத் சிங், தொழிலாளர்கள் சந்தீப் சாஹு, ஜக்தா எக்ஸ், சந்தோஷ் சாஹு, அஞ்சு சாஹு ஆகியோர் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் 48 மணி நேரம் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக இந்திய ராணுவத்தின் கீழ் ஒரு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை மிட்டு வெளியே கொண்டு வந்தவுடன் காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நாட்டிலேயே மிக உயரமான தங்க கோபுரம்... கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்..!

நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 120 பேரும், துணை பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 70 பேரும், சிங்கரேணி நிலக்கரி சுரங்க மீட்புக் குழுவைச் சேர்ந்த 35 பேரும், ஹைட்ரா குழுவை சேர்ந்த 15 பேரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ஆதித்யநாத் தாஸ், பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் அரவிந்த் குமார், ஹைட்ரா கமிஷனர் ரங்கநாத், நாகர்கர்னூல் கலெக்டர் சந்தோஷ், எஸ்பி வைபவ் கெய்க்வாட், என்டிஆர்எஃப் கமாண்டன்ட்கள் சுதிஷ் குமார், பிரசன்னா, பவன், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ஆர்எஃப் ஹரிநாத் ரெட்டி, சிங்கரேணி மீட்புக் குழுத் தலைவர் கலந்தர் போன்ற முக்கிய அதிகாரிகள் அங்கேயே தங்கி மீட்பு பணிகளை மேற்பார்வையிடுகின்றனர்.

50 பேர் கொண்ட மூன்று குழுவாக மீட்புக்குழ்வினர் சுரங்கத்திற்கு உள்ளே சென்று மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதால், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மீட்புக் குழுக்கள் அயராது உழைத்து வருகின்றனர். தங்கள் முயற்சிகளால், சிக்கியிருப்பவர்கள் விரைவில் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் மீட்பு குழுவினர் 11.6 கிலோமீட்டர் வரை மட்டுமே சுரங்க ரயிலில் செல்ல முடிகிறது. அதன் பிறகு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வாறு நடந்து செல்லும் வழியிலும் முழங்கால் வரை ஒரு இடத்திலும் அதன் பிறகு கழுத்து வரை தண்ணீர் சேர்ந்துள்ளதால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து தண்ணீர் வரத்தும் இருந்து வருவதால் தண்ணீர் மற்றும் அங்கு மணல் வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீரின் வேகத்திற்கு ஒரு பெரிய ராட்சத போர்வெல் இயந்திரமும் அடித்து வரப்பட்டு சுரங்கத்திற்குள் உள்ளதால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களின் பெயர்களை கொண்டு அழைத்தாலும் எந்தவித பதிலும் அவர்களிடம் இருந்து வரவில்லை அதனால் மீட்பு குழுவினர் முழு முயற்சியுடன் பணிகளை மேற்கொண்டாலும் அவர்களை உயிருடன் கொண்டு வர முடியுமா என்பது மாநில அமைச்சர் ஜுப்பள்ளி கிருஷ்ணா ராவ் சந்தேகத்தை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் அனைவரும் வேண்டிக் கொள்கின்றனர்.
இதையும் படிங்க: தாலி கட்டும் நேரத்தில் சரிந்து விழுந்த மணமகளின் தந்தை.. நொடியில் துக்க வீடான திருமண வீடு.!