நோன்பு விழாவில் பங்கேற்க வந்த தங்களை தவெகவினர் அவமதித்துவிட்டதாக புதுப்பேட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் போர்க்கொடி உயர்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அழைப்பிதழ் ஏற்கனவே அச்சிடப்பட்டு, முக்கிய இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகத்தின் 120 அமைப்பு மாவட்டங்களில் நோன்பு இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இந்நிகழ்ச்சியில் 3000 பேர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜயின் புது கெட்டப்பை பார்த்து வெறியான தொண்டர்கள்... தவெக இஃப்தார் நிகழ்ச்சியில் பரபரப்பு...!

இந்நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றதை அடுத்து தடுப்புகள், பவுன்சர்களை எல்லாம் கடந்து ஏராளமான தவெக தொண்டர்கள் அரங்கத்திற்குள் நுழைந்துவிட்டனர். இதனால் முறையாக அழைப்புவிடுக்கப்பட்ட இஸ்லாமியர்களை உள்ளே செல்ல விடாமல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஊடகத்திற்கு பேட்டியளித்த புதுப்பேட்டை இஸ்லாமியர்களுடன் தவெக நிர்வாகி வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுக்கு அழைப்பு கொடுத்து தான் வந்தோம். முறையா உட்கார வைக்கல. கேட்டா பப்ளிக் எல்லாம் உள்ள பூந்துருச்சு அப்படிங்கிறாங்க. அப்புறம் எதுக்கு அவங்க நடத்துறாங்க, எங்கள கூட்டிட்டு வச்சு அசிங்கப்படுத்துறாங்களா? இவங்கள மதிச்சு நாங்க வந்தது தப்பு. இந்த கூட்டத்துல பர்ஸ் காணாம போச்சு, ஆர்சி புக், இன்சூரன்ஸ், செக் எல்லாமே அதுல இருந்தது. அது மொத்தமா காணோம் யாரு அதுக்கு எல்லாம் பொறுப்பு என இஸ்லாமியர் ஒருவர் ஆவேசமாக பேசினார்.

அப்போது அவரைக் குறுக்கிட்ட தவெக நிர்வாகி ஒருவர், நீங்க எந்த பொறுப்புல இருக்கீங்க. நாங்க தான் இந்த மாதிரி பிரச்சனை வரக்கூடாதுன்னு பாஸ் கொடுத்திருக்கிறோம் இல்லையா?. நீங்கள் வேண்டுமென்றே யாருடைய தூண்டுதலிலோ எங்கள் தலைவர் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என சண்டையிட்டார். இதனால் இரு தரப்பினர் இடையே வார்த்தை போர் வெடித்தது. எங்களுடைய தலைவரும் காலையில் இருந்து சாப்பிடாமல் நோன்பு இருந்துவிட்டு வந்திருக்கிறார். ஆனால் இங்கு சிலர் குடித்துவிட்டு, புனிதமான நோன்பு இருக்கும் இடத்திற்குள் நுழைய பார்க்கிறார்கள் என்றெல்லாம் அந்த நிர்வாகி பேசினார். இதனால் ஆவேசமடைந்த இஸ்லாமியரோ, யார் குடித்துவிட்டு வந்திருக்கிறார்கள். அப்படி யாராவது வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள் என்றார்.

அதற்கு அந்த நபரோ தனது பெயர் ஸ்ரீதரன் என்றும் ஐகோர்ட் வழக்கறிஞர் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டதோடு, தனக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றும் வெளியே கூட்டத்தைக் கட்டுப்படுத்த உதவ வந்ததாகவும் கூறினார். மேலும் 1500 பேருக்கு பாஸ் கொடுத்தால் 3000 பேர் வந்துவிடுகிறார்கள். சாதாரண தவெக தொண்டனாக இங்கு பலரும் அசம்பாவிதங்களை தடுக்க போராடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: முழு இஸ்லாமியராகவே மாறிட்டாரே... தலையில் குல்லா, வெள்ளை லுங்கி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்...!