தூத்துக்குடி மாநகரில் உள்ள இளைஞர்கள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்களைக் குறி வைத்து கஞ்சா விற்பனை படு ஜோராக நடைபெற்று வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உலா வந்தன. அதனால், இதனைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 8) தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் 350 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி மாநகராட்சியின் 26-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் மரிய கீதாவின் மகன் ஜெர்சன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 55 கிலோ கஞ்சா பறிமுதல்.. அதிரடி காட்டும் சுங்கதுறை அதிகாரிகள்..!
அதனைத் தொடர்ந்து, திமுக மாநகராட்சி கவுன்சிலரின் மகன் ஜெர்சனுடன் சேர்த்து தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ஹரி பிரபாகர், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் என்ற மொட்டை சக்தி, கேவிகே நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவர்கள் கஞ்சாவை எங்கிருந்து வாங்குகின்றனர், வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்றும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரயிலில் கஞ்சா கடத்தல்.. இளைஞர் துணிகரம்.. சுற்றி வளைத்த போலீசார்..