மதுரை உயர்நீதிமன்றத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சமூகநலத் துறை சார்பில் கடந்த 2024ஆம் ஆண்டு பள்ளி சத்துணவு மையங்களில் 8997 சமையலர் உதவியாளர் காலிப்பணியிடம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமையல் உதவியாளர் பணியானது காய்கறிகள் வெட்டுவது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற எளிதான வேலையாக தான் இருக்கும். இந்த வேலைகளை மாற்றுத்திறனாளிகள் செய்வதில் எந்த சிரமமும் இல்லை. எந்த ஒரு வேலை வாய்ப்பிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே, சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து, மாற்றுத்திறனாளிக்கு சமையல் உதவியாளர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்" என அவர் கோரியிருந்தார்.
இதையும் படிங்க: தாமிரபரணி ஆறு மாசடைவதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு.. திட்ட மதிப்பீடு குறித்து நீதிமன்றம் கேள்வி
இந்த வழக்கு நீதிபதிகள் ஜே. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் திலக்குமார், சமையல் உதவியாளர் பணியில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்வதற்காக, 4 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் கோரிக்கை தேவையற்றது என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து, சுந்தர விமலநாதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். அரசுப் பள்ளி சத்துணவு மையங்களில் 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவிதம் இடஒதுக்கீடு வழங்கியும் கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சத்துணவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவிதம் இடஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோருக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சாவிலும் பிரியாத பாசமலர்கள்; தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழப்பு..!