கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுகவினர் கூட்டணிக்காக சந்தித்தனர் என்பது உண்மையான தகவல் இல்லை.டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத்தைப் பார்வையிடவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக நலனுக்காகவும் பல்வேறு நல திட்டங்களைப் பெறவுமே மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். மேலும், மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். இதில் அரசியல் எதுவும் இல்லை.

அதிமுக 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்த கட்சி அதிமுக. எனவே, அதிமுக எப்பொழுதும் ஒரே பார்வையில்தான் சென்று கொண்டிருக்கிறது. எங்களுடைய ஒரே எதிரி திமுகதான். திமுகவை எதிர்த்து களத்துக்கு யார் வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுடன் யார் இணக்கமாக இணைந்து செயல்பட முன்வந்தால் அதற்குத் தயாராக இருக்கிறோம்.
இதையும் படிங்க: தம்பி விஜய்க்கு எங்களைப் பற்றி நல்லா தெரியும்... திமுகவின் கரிசனம் அதிமுகவுக்கு தேவையில்லை - சிதறவிடும் செல்லூரார்..!

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறுவதும்; ஒரு தொண்டனாக இருந்துகூடப் பணியாற்றுவேன், கட்சி நலனே முக்கியம் என அண்ணாமலை கூறுவதும் அவரவர் கருத்து. இது குறித்து அவர்கள்தாம் விளக்கம் அளிக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் டெல்டா, ஓலா, டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் உள்படப் பல்வேறு நிறுவனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோன்றின. திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் அது போல ஏதாவது ஒரு நிறுவனம் வந்ததா? 2026 தேர்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்துக்கும் இடையேதான் போட்டி என விஜய் அவருடைய கருத்தைக் கூறியுள்ளார். அவர் படங்களைகூட வெளியிட முடியாமல் திமுக ஆட்சியில் சிரமம் கொடுத்தனர்.

அதிமுக ஆட்சியில் அவருக்கு அதுபோன்ற சிரமங்கள் இல்லை. அந்த மனக்குமுறலின் வெளிப்பாடாக அவர் பேசியுள்ளார். இனி வெளியில் வந்து அரசியல் ரீதியாக அவர் பேச வேண்டும். ஆதவ் அர்ஜுனா எங்கு சென்றாலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். அவரை அடையாளம் கண்ட விசிக தலைவர் திருமாவளவன் அவரை ஒதுக்கினார். சினிமா அனுபவம் மிகுந்தவர் விஜய். இன்னும் மக்களையே அவர் சந்திக்கவில்லை. நான்கு சுவர்களுக்குள்ளே 2 ஆண்டுக்கால அரசியலை முடித்துவிட்டார். மக்களைச் சந்தித்து அரசியல் செய்யும்பட்சத்தில் அரசியலை புரிந்து அதற்கேற்ப அவர் நடந்து கொள்ள வேண்டும்.” என்று கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்? நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் அவசர சந்திப்பு!