தமிழக சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியதும், திருக்குறளை வாசித்து அவை நடவடிக்கைகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். தொடர்ந்து மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர் செரியன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. இதன்பின்னர், வினாவிடை நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இதன்பிறகு, நேரமில்லா நேரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்திருந்த சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்காரணமாக தனது சபாநாயகர் இருக்கையில் இருந்து அப்பாவு கீழே இறங்கினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் உடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை.. இபிஎஸ் மீதான அதிருப்தியை சரிக்கட்ட முயற்சி..!
பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடுநிலையாக இருந்து அவையை நடத்த வேண்டிய சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தால் போங்க, போங்க என்று கூறுவதோடு எங்களைப் பார்த்து நகைக்கிறார்.

அரசுக்கு எதிரான கேள்விகளை நாங்கள் எழுப்பினால் அமைச்சர்களுக்கு முன்னதாகவே சபாநாயகர் பதிலளிப்பதாகவும் இபிஎஸ் குற்றஞ்சாட்டி பேசினார். மேலும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு குறிப்பாக அதிமுகவினருக்கு பேசுவதற்கு உரிய நேரம் தருவதில்லை என்றும் இடைமறிக்கும் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு அதிக நேரம் தந்து பாரபட்சம் காட்டுவதாகவும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
யாருடைய கட்டளையின்படி எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது சபாநாயகர் அடிக்கடி குறுக்கீடு செய்கிறார் என்றும் இது நியாயம்தானா என்றும் இபிஎஸ் கூறினார். மேலும் சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்போது எதிர்கட்சிகள் பேசினால் மட்டும் நேரலை நிறுத்தப்படுவது குறித்து சபாநாயகர் கவலைப்படுவதில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆண்டுக்கு நூறு நாட்கள் தமிழக சட்டப்பேரவை நடத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டிய இபிஎஸ், அதன்படி இந்த 4 ஆண்டுகளில் 400 நாட்கள் அவை நடந்திருக்க வேண்டும் என்றார். மாறாக 116 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை கூடியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே இபிஎஸ் பேசும்போது குறுக்கிட்ட அமைச்சர் எ.வ.வேலு, தீர்மானத்தின் மீது மட்டும் பேசவேண்டுமே தவிர பழைய விஷயங்களை கூறக்கூடாது என குறிப்பிட்டார். அப்போது பேசிய காங்கிரசின் செல்வபெருந்தகை, சபாநாயகர் நடுநிலையோடு தான் செயல்படுவதாகவும், தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்போம் என்றும் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 5 எம்எல்ஏக்களும் இன்று அவைக்கு வரவில்லை. அதாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவர்கள் புறக்கணித்துள்ளனர். வந்தால் ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இதனால் அவையில் அவர்கள் காணப்படவில்லை.
இதையும் படிங்க: அதிமுகவின் புதிய யுக்தி… செங்கோட்டையன் வழியிலேயே திருப்பியடித்த எடப்பாடி பழனிசாமி..!