சென்னையில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது...
”அதிமுக நிரந்தர பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டுகள் பொதுச்செயலாளராக பணியாற்றி, அதிமுகவுக்கு வந்த சோதனையை வென்று, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக வரலாற்றில் தனி இடம் பிடித்தார் ஜெயலலிதா. இன்றைக்கு ஜெயலலிதா பிறந்தநாளில் விசுவாசமிக்க தூய தொண்டர்கள் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறார்கள்.

ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவை உச்சாணி கொம்பில் நிலைநிறுத்தினார். அதற்கு பின்னால் நடைபெற்ற அரசியல் சூது, சூழ்ச்சி, வஞ்சனை, நம்பிக்கை துரோகம் இவைகளெல்லாம் யாரால் அரசியலில் அரங்கேற்றப்பட்டது என்பது தொண்டர்களுக்கு தெரியும். அதற்கு பின்னால் நடைபெற்ற 11 தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைத்தான் சந்தித்தது. இவை எல்லாவற்றிற்கும் காரணம், ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்று அடம்பிடித்து, அதை ஏற்றுக்கொண்டவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: கூட்டணி இருக்கும்போது 'வேட்டு' அணி எதற்கு..? எடப்பாடியார் போட்ட சபதம்..!

வசந்தகாலமாக இருந்த காலத்தை இன்றைக்கு மாற்றி உள்ளார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் பெயர்கள் எல்லாம் வருங்காலத்தில் நான் தவிர்க்க வேண்டும் என்றுதான் பொதுமக்களும் என்னிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஓநாயும்... வெள்ளாடும் என்று மனசாட்சி இல்லாமல் இன்று பேசுகின்றவர்கள் எது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். எங்கள் வாய் நல்ல வாய், அவர்கள் (எடப்பாடி) வாய் என்ன வாய் என்று பொதுமக்களே முடிவு செய்து கொள்ளட்டும். அதிமுக தொண்டர்களின் விருப்பம், கட்சி இணைய வேண்டும் என்பதுதான். அது நிறைவேற வேண்டும் என்றுதான் தர்மயுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

தமிழக மக்கள் விரும்புவது இருமொழி கொள்கைதான் என்று அண்ணா தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார். எம்ஜிஆரும் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார். ஜெயலலிதாவும் அந்த நிலையில் உறுதியாக இருந்து, தமிழக மக்கள் விரும்புவது இருமொழி கொள்கைதான் என்று சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார். நானும் தமிழக முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் இதுகுறித்து நீண்ட விளக்கம் அளித்துள்ளேன்.

மாநில, மத்திய அரசு நிதி என்பது மக்களின் வரி பணம். தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் தமிழ்மொழியில்தான் அம்மா என்று அழைக்கிறார்கள். தாய்மொழி தமிழ் தான். விருப்பப்பட்டவர்கள் என்ன மொழி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். தாய்மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஒரே அணியில்...தாய் வழி வந்த தங்கங்கள்...போஸ்டரால் பரபரப்பு