அமெரிக்காவின் போலீஸ் துறையில் ஒரு பிரிவான ‘ரகசிய சேவை’ (சீக்ரெட் சர்வீஸ்) என்ற அமைப்பின் கெளவுரவ இயக்குநராக 13வயது சிறுவனை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்து உத்தரவிட்டார். இந்த சிறுவன் பெயர் டிஜே டேனியல். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனுக்கு சிறுவயதில் இருந்தே போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக வேண்டும் என்ற அசை இருந்தது. ஆனால், புற்றுநோயால் வாழ்க்கையில் போராடி வரும் இந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒருநாள் ரகசிய சேவை இயக்குநராக நியமித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.

அதிபர் ட்ரம்ப்பின் இந்த செயலைப் பாராட்டி நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வாழ்த்துத் தெரிவித்தனர். அதிபர் ட்ரம்ப் உத்தரவையடுத்து, 13 வயது சிறுவன் டிஜே டேனியல் சீக்ரெட் சர்வீஸ் இயக்குநராக பொறுப்பேற்றார், அவரின் பேட்ஜை அவரின் தந்தையிடம் இயக்குநர் சீன் கரன் வழங்கினார்.
இதையும் படிங்க: இந்தியா மீதான பரஸ்பர வரித் திட்டம் ஏப்ரல் முதல் அமல்... அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு..!
யார் இந்த டேனியல்?
13 வயது சிறுவன் டிஜே டேனியல் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் நோய் முற்றிவிட்டதால், சிகிச்சையும் பலனளிக்காமல் இருப்பதால், இன்னும் 6 மாதங்களுக்குள் உயிரிழந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

டேனியலுக்கு சிறுவயதிலிருந்து போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக மாற வேண்டும் என்ற கனவு, லட்சியம் இருந்தது. கடந்த 6 ஆண்டுகளாக போலீஸ் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கும் சென்று டேனியல் கெளரவ பொறுப்புகளை ஏற்றிருந்தார். போலீஸ் அதிகாரிகளும் டேனியல் நிலைமை அறிந்து அவருக்கு இருக்கையில் அமர்ந்து பொறுப்பை கவனிக்க சம்மதித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தத் தகவல் அதிபர் ட்ரம்ப்புக்கு கொண்டு செல்லப்படவே, டேனியலை சீக்ரெட் சர்வீஸ் இயக்குநராக நியமித்து சிறுவன் ஆசையை நிறைவேற்ற உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் ஜேஸன் ஹாட்லியை வெஸ்ட் பாயின்டில் உள்ள அமெரிக்க ராணுவ அகாடெமியில் சேர்க்கவும் உத்தரவிட்டார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் பேசுகையில் “சிறுவன் டேனியல் சீக்ரெட் சர்வீஸ் கௌரவ இயக்குநராக பொறுப்பேற்பார். இந்த அவைக்கு டேனியல் வந்திருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட பார்வையாளர்கள் மடத்தில் இருந்த டேனியல் தந்தை, டேனியலை தூக்கி கொண்டாடினார். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் டேனியல் பெயரையும், ட்ர்ம்ப் பெயரையும் உச்சரித்து கோஷமிட்டனர்.
இதையும் படிங்க: அமெரிக்க ராணுவ உதவி திடீர் நிறுத்தம், ரஷ்ய அதிபர் புதினுக்கு உதவி செய்வதாகும் - உக்ரைன் கருத்து..!