மஹா சிவாத்திரி விழா, கட்சி அலுவலகத் திறப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை தனி விமானம் மூலம் கோவை வருகைத் தர உள்ளார்.

ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி விழா, கட்சி அலுவலகம் திறப்பு விழா உள்ளிட்டவற்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொள்ள உள்ளார். இதன் காரணமாக கோவையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 26ஆம் தேதி அமித்ஷா, அண்ணாமலை சந்திப்பு..! கோவையில் முக்கிய ஆலோசனை..!
கோவை மாவட்டம் பீளமேடு, அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் பாஜக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை திறந்து வைக்க உள்ளார். மேலும், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களையும் காணொளி காட்சி வாயிலாக அமித்ஷா திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் நடக்க உள்ள மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த பின்னர், ஈஷா வளாகத்தில் தங்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா, மறுநாள் (பிப்ரவரி 27) காலை ஹெலிகாப்டர் மூலமாக கோவை விமான நிலையத்துக்கு சென்றடைந்த பின்னர், விமானம் மூலம் புதுடெல்லி திரும்புகிறார்.

இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வர உள்ளார். அங்கிருந்து கார் மூலம் நவஇந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று இரவு தங்க உள்ளார்.

இதனிடையே, மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமித்ஷா தங்குமிடம், பாஜக அலுவலகம் உள்ள பகுதிகள், ஈஷா வளாகம், அமித்ஷா பயணம் மேற்கொள்ளும் பாதைகள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இதில் ஈகோ பார்க்கக் கூடாது… மோடி-அமித் ஷாவிடம் நேருக்கு நேர் எகிறிய ராகுல் காந்தி..!