ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கின்றது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி என பல்வேறு அணிகளாக பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அணியினர் அனைவரும் பாஜ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர். பாஜக தயவோடு மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஓபிஎஸ் உள்பட யாரையும், எக்காரணம் கொண்டும் கட்சியில் மீண்டும் சேர்ப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளார். அதேபோல வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்பதிலும் எடப்பாடி பழனிசாமி உறுதிகாட்டி வந்தார்.

ஆனால் அதிமுக செல்வாக்கு கொண்ட மேற்கு மண்டலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலாவைத் தவிர மற்றவர்களுடன் இணைய தயாரானாலும் தன்னையே முன்னிலை படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமித் ஷா வைத்த செக்..! தமிழில் பொறியியல், மருத்துவப் படிப்புகள் இருக்கிறதா..? உண்மை நிலை என்ன..? கேள்விகளும் விளக்கங்களும்..!
செங்கோட்டையன் திடீர் போர்க்கொடி தூக்குவதுவதற்கு பின்னணி டெல்லி பாஜக தலைமைதான் என்பதை இப்போது எடப்பாடி பழனிசாமி புரிந்து கொண்டுள்ளார். இதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து டெல்லியின் திட்டத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார். அப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதைப் பற்றியும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

பொதுச்செயலாளர் பதவி தன்னிடமிருந்து செங்கோட்டையனுக்கோ, எஸ்.பி.வேலுமணிக்கோ மாறிவிடக் கூடாது என்பதால் பாஜக தலைமை சொன்னதற்கு எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியை மீண்டும் ஒன்று சேர்த்தால்தான் தேர்தல் நேரத்தில் ‘வேண்டியதை செய்வோம்’ என பாஜக தலைமை எச்சரித்ததால், சசிகலாவை தவிர மற்றவர்களுடன் இணைய எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார் என்கிறார்கள்.
ஆனால்,ஓ.பி.எஸுக்கு வேறு பதவி கேட்கக் கூடாது. தலைமை பதவி தன்னிடம் தான் இருக்க வேண்டும், தேர்தலில் தன்னையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் கவனத்திற்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் கண்ணசைத்தால் இணைப்பு அரங்கேறும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பல ஆதரவாளர்கள் கூடிப் பேசி வருகிறார்கள்.

இதனால் அவர்கள் முகத்தில் இப்போதே ஆயிரம் வாட்ஸ் பல்புகள் வெளிச்சம் பாய்ந்துள்ளது. இதனை அறிந்து கொண்டுள்ள அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் இத்தனை நாள் வாய்க்கு வந்ததை பழித்து விட்டு இப்போது இணைந்தால் எப்படி அவர்களுடன் பேச முடியும்? என கையை பிசைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அமித் ஷா - சந்தானபாரதி குழப்பவாதிகளுக்கு தமிழின் அருமை எப்படிப் புரியும்..? அன்பில் மகேஷ்..!