கோபி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் தர்மர்பாண்டி மகன் யுவராஜ் (51). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஜெ.பேரவை மாவட்ட செயலாளராக உள்ளார். யுவராஜ், கடந்த சில ஆண்டுகளாக கந்து வட்டி தொழில் செய்து வந்துள்ளார். கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏழை பெண்களை குறிவைத்து 5 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடனாக கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கோபி நாகர்பாளையத்தை சேர்ந்த காஜா மைதீன் மனைவி மகேஷ்வரி (40) என்பவர் யுவராஜூவிடம் 30 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு வாரம் தோறும் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்துள்ளார். கடனுக்கு ஈடாக வெற்று காசோலையையும் கொடுத்துள்ளார்.10 வாரங்கள் செலுத்திய நிலையில், அவரது கணவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் இரு வாரங்கள் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2026இல் திமுக ஆட்சிக்கு முடிவுரை.. NDA ஆட்சிக்கு தொடக்கவுரை.. டிடிவி தினகரன் ஒரே போடு.!!

இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், மகேஷ்வரி வேலை செய்து வரும் பல சரக்கு கடைக்கு சென்று தகராறு செய்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்வரி இதுகுறித்து கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். யுவராஜ் மீது மகேஷ்வரி புகார் அளித்து இருப்பது குறித்து தகவல் அறிந்த 20க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் திரண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் கந்து வட்டி கொடுமை தடுப்புச்சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தையால் திட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கோபி போலீசார், அ.ம.மு.க நிர்வாகி யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்து தலைவர் அடித்துக் கொலை... உடலை வீட்டு வாசலில் வீசிய மத வெறியர்கள்- வங்கதேசத்தில் வெறியாட்டம்..!