இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சியை ஆதரித்து, கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில், பாரதிய பாஷா பரிஷத் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு இந்திய அளவில் அந்தந்த மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் சிறந்த எழுத்தாளர்களுக்கு, 'பாரதிய பாஷா' என்ற விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டு தமிழக எழுத்தாளர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, நாட்டின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்நாள் இலக்கிய பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையும், பாராட்டு பத்திரமும் உடைய இந்த விருது வரும் மே மாதம் ஒன்றாம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: இலக்கிய திருவிழாவின் வித்து இரா. நாறும்பூநாதன் மறைவு!

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பட்டப் படிப்பை முடித்து, மாணவ பத்திரிகையாளராக பயிற்சி பெற்று, இலக்கியம் படைத்து வருபவர். நாவல், சிறுகதை, கட்டுரை என, 100க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். இவரது நுால்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன.

கடந்த 2018ஆம் ஆண்டு சஞ்சாரம் என்ற நாவலுக்காக, சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும், தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, ஞானவாணி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர்.

தற்போது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தமிழக எழுத்தாளர்கள் அசோகமித்திரன், மாலன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.இதனிடையே பாரதிய பாஷா விருதுக்கு தேர்வாகி உள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,இந்திய அளவில் புகழ்மிக்க பாரதிய பாஷா பரிஷத் அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுகள் என்றும் சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துப்பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புவதாக் கூறியுள்ளார். தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும், மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்நோக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எல்லாமே நான் தான்.. அன்புமணி பதவி பறிப்பு விவகாரம்..! குடும்ப உறுப்பினர்களுடன் ராமதாஸ் ஆலோசனை..!