கர்நாடக இசைக்கலைஞர்கள் அதிக அளவில் கச்சேரிகள் செய்வது இந்த டிசம்பர் சீசனில் தான். இதற்கு இணையாக சமீபமாக மக்களிசை என்ற பெயரில் கர்நாடக இசை அல்லாத முயற்சிகளும் தனிநபர்களாலும், ஒருசில இயக்கங்களாலும் முன்னெடுக்கப்படுகின்றன. அவையும் வரவேற்பை பெற்று வருகின்றன.
அதேபோன்று பபாசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் இந்த ஜனவரியில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி சென்னைவாசிகளுக்கு அறிவுசார் விருந்து என்றால் அது மிகையல்ல. முக்கிய எழுத்தாளர்கள், அவர்களது படைப்புகள் என இலக்கிய உலகம் மிகுந்த புத்துணர்ச்சியுடன் செயல்படும் நாட்கள் இவை. 
இந்தமுறை டிசம்பர் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஜனவரி 12 வரை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வாடிக்கை. எனவே பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே புத்தக கண்காட்சி நிறைவடையும் பட்சத்தில் அந்த மக்களும் புத்தகங்களும் வாங்குவார்கள், சொந்த ஊருக்கும் செல்வார்கள் என்பதால் இந்த தேதியை பபாசி வரையறை செய்துள்ளது. மக்களே இதுவரை புத்தக கண்காட்சி போகலனா, உடனே வண்டியை எடுத்துட்டு ஒருஎட்டு பார்த்துட்டு வந்துடுங்க.. புத்தகம் வாங்குறீங்களோ, அந்த பண்பாட்டு அசைவுக்குள் இருக்குற மனநிலையை அனுபவிச்சுட்டு வந்துருங்க..
ஒருபக்கம் புத்தக கண்காட்சி என்றால், இன்று (2/1/25) செம்மொழி பூங்காவில் 4-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 8 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் செம்மொழி பூங்காவிற்குள் ஏற்கனவே பல சிறப்பம்சங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்படுவது முத்தாய்ப்பு என்றே சொல்லலாம்.

ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு செல்ல முடியாதவர்கள், நம்ம செம்மொழி பூங்காவில் உள்ள மலர் கண்காட்சிக்கு போங்க, பாருங்க, ரசிங்க... கோயம்புத்தூர், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, இப்படி பல மாவட்டங்களில் இருந்து விதவிதமான பூக்களை கொண்டு வந்து இருக்காங்க. கிட்டத்தட்ட 50 வகையான மலர்களும், 30 லட்சம் தொட்டிகளில் வைக்கப்பட்டு இருக்காம். (அடேங்கப்பா).. அது இல்லாம விதவிதமான உருவங்களில் செடிகள் அலங்கார வளைவுகளா செஞ்சு வச்சு இருக்காங்க.
காலையில் 10 மணிக்கு திறக்குறாங்க, இரவு 7 மணி வரை பார்க்கலாங்க.. பெரியவங்களுக்கு 150 ரூபாய், இதுவே சின்ன பசங்கனா 75 ரூபாய், கேமரா கொண்டு போய் அந்த பூக்களை போட்டோ எடுக்கப் போறேனு சொன்னா 500 ரூபாய் கட்டணம்...
இதையும் படிங்க: 10 நாட்கள் அடாவடி.. அலறவிட்ட புல்லட் ராஜா யானை ..ஆனைமலைக்கு கொண்டு சென்ற வனத்துறை

நந்தனத்துக்கு போய் புத்தகங்கள் பாருங்க, இல்லன்னா கொஞ்சம் தள்ளிபோய் நந்தவனத்தையே பாருங்க..
இதையும் படிங்க: ‘அவலத்தின் உச்சம்...’ஸ்டாலின் போஸ்டர் மீது தாக்குதல்... மூதாட்டியை தேடி அலையும் போலீஸ்..!