வெள்ளிக்கிழமை என்றாலே தமிழ்த் திரைப்பட உலகில் ஏதேனும் புதிய படங்கள் வெளியாவது வழக்கம். அந்தவகையில் இன்று அகத்தியா, சப்தம், கூரன், கடைசித் தோட்டா ஆகிய நான்கு படங்கள் வெளியாகி உள்ளன.

இதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் நடிகர் ஜீவாவின் அகத்தியா. இதில் சிறப்பு என்னவென்றால் பாடலாசிரியர் பா.விஜய், கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜீவா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். சித்த மருத்துவ ஆராய்ச்சியாளராக அர்ஜுன் நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: வெளியாவதற்கு முன்பே சிக்கலை எதிர்கொள்ளும் Bad Girl.. சென்சார் போர்டு சொன்ன தகவல் இதுதான்..!

எதிர்பாராதவிதமாக மாய உலகம் ஒன்றுக்கு செல்ல நேரிடும் கதாநாயகன் ஜீவா, அங்கு சாத்தான்களுக்கும், தேவதைகளுக்கும் இடையிலான சண்டையில் சிக்கிக் கொள்கிறார். எப்படி மீண்டு வந்தார் என்பதை பேண்டஸியாக இப்படத்தில் கூறியிருக்கிறார்களாம்.
ஈரம் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்த அறிவழகன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி இருக்கும் படம் சப்தம். குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் இந்த அமானுஷ்யம் என்ற அடைமொழியோடு வெளிவந்துள்ளது. ஆதி கதாநாயகனாகவும், லட்சுமி மேனன் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். உதயகுமார், சுதாகர் ஆகியோர் ஒலிப்பதிவு செய்துள்ளனராம். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக நடித்துள்ள கூரன் படத்தை நிதின் வேமுபதி இயக்கி உள்ளார். கனா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் விக்கி இப்படத்தை தயாரித்துள்ளார். விபின் இசையமைத்துள்ளார். ஒரு நன்றியுள்ள நாயை மைய கதாபாத்திரமாக்கி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். இதுமட்டுமல்லாமல் கடைசி தோட்டா என்ற படமும் இன்று வெளியாகிறது.

ஓடிடி தளத்தில் கதிர், ஜஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற சுழல் என்ற வெப்சீரிசின் இரண்டாம் பாகமும் வெளியாகி உள்ளது. ஜோதிகா நடிப்பில் இந்தியில் டப்பா கார்ட்டல் என்ற தொடரும் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளும் ரவி மோகன்... கை வசம் இருக்கும் நிறைய படங்கள்..!