ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன்ஜாமின் கேட்டு தொடர்ந்த மனுவை அவசர மனுவாக இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார்.

இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். சிவசேனா கட்சியினர் நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையும் படிங்க: அவுரங்கசீப்பை புனிதப்படுத்துபவர்கள் ‘துரோகிகள்’.. தீயில் நெய்வார்த்த மகாராஷ்டிரா துணை முதல்வர் பேச்சு..!
இதையடுத்து, குணால் கம்ரா மீது ஒரு வழக்கும் அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவைச் சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் என இரண்டு வழக்குகளை மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது. எனினும், இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் . அந்த மனுவில் தனது சொந்த ஊர் விழுப்புரம் என்றும் தான் மும்பை சென்றால் தன்னை போலீஸார் கைது செய்வார்கள் என்றும், சிவசேனா தொண்டர்களால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாகவும், எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் எஸ் சுரேஷ் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். சுந்தர் மோகன் முன்பாக முறையிட்டார்.
இந்த முறையீட்டை ஏற்று கொண்ட நீதிபதி, மனுவை இன்று பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஷிண்டேவை கிண்டலடித்து வீடியோ… காமெடி நடிகருக்கு 'சீரியஸ்' டிரெய்லர் காட்டிய ஆதரவாளர்கள்..!