கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினமும் வருகை புரிகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டும் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத் துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். கோடை காலம் என்பதால், தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான தனியார் வங்கி ஊழியரான ரமேஷ் என்பவர் தனது நண்பர்கள் 5 பேருடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக சென்றுள்ளார். காஞ்சிபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு, நேற்று முன்தினம் இரவு கோவில் அடிவாரம் வந்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி...வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறிய, ரமேஷ் சாமி தரிசனம் முடித்துவிட்டு, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கீழே 6வது மலையில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கடும் குளிர் காரணமாக திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதையடுத்து வனத்துறையினர் மற்றும் ஊழியர்கள், உறவினர்கள் ரமேஷின் உடலை அடிவாரத்திற்கு தூக்கி வந்தனர். தகவலறிந்து வந்த ஆலந்துறை போலீசார், ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு வாரத்திற்கு முன்னதாக வெள்ளியங்கிரி மலையேறிய திரும்பிய பெங்களூருவைச் சேர்ந்த சிவா என்ற 40 வயது நபர், மூன்றாவது மலையில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். தற்போது மற்றொரு பக்தர் வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி...வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!